மாநிலங்களவைக்கு புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க.வுக்கு முதன்முதலாக இடம் - ஒவ்வொரு தொண்டருக்கும் மகத்தான பெருமை என மோடி நெகிழ்ச்சி


மாநிலங்களவைக்கு புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க.வுக்கு முதன்முதலாக இடம் - ஒவ்வொரு தொண்டருக்கும் மகத்தான பெருமை என மோடி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 Sep 2021 12:34 AM GMT (Updated: 29 Sep 2021 12:34 AM GMT)

மாநிலங்களவைக்கு புதுச்சேரியில் இருந்து முதன்முதலாக பா.ஜ.க.வுக்கு இடம் கிடைத்துள்ளது. இது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டருக்கும் மகத்தான பெருமை என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

புதுச்சேரியில் இருந்து நமது கட்சியைச் சேர்ந்த எஸ்.செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிருந்து நமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக மாநிலங்களவை எம்.பி.யாகி இருப்பது பா.ஜ.க. தொண்டர் ஒவ்வொருவருக்கும் மகத்தான பெருமை அளிப்பதாகும். புதுச்சேரி மக்கள், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நெகிழ்ச்சி அடைகிறோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து உழைப்போம்.

இவ்வாறு அதில் மோடி கூறி உள்ளார்.

மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய மந்திரி எல்.முருகனும், அசாம் மாநிலத்தில் இருந்து சர்வானந்தா சோனாவாலும் பா.ஜ.க. சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “எனது சக மந்திரிகள் சர்வானந்தா சோனாவால், எல். முருகன் ஆகியோர் முறையே அசாமில் இருந்தும், மத்திய பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடாளுமன்ற செயல்முறைகளை செழுமைப்படுத்துவார்கள், பொதுநன்மைக்கான நமது செயல்திட்டத்தை மேலும் மேம்படுத்துவார்கள்” என கூறி உள்ளார்.

Next Story