‘கட்சியில் இருந்து விலகுவேன்’ என்று அமரிந்தர் சிங் திடீர் அறிவிப்பு - பஞ்சாப் அரசுக்கு மீண்டும் நெருக்கடி


‘கட்சியில் இருந்து விலகுவேன்’ என்று அமரிந்தர் சிங் திடீர் அறிவிப்பு - பஞ்சாப் அரசுக்கு மீண்டும் நெருக்கடி
x
தினத்தந்தி 30 Sep 2021 9:36 PM GMT (Updated: 30 Sep 2021 9:36 PM GMT)

‘கட்சியில் இருந்து விலகுவேன்’ என்று அமரிந்தர் சிங் அறிவித்தார். இதனால் பஞ்சாப் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

சண்டிகார்,
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் மிக சில மாநிலங்களில் முக்கியமானது, பஞ்சாப்.

அங்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரிந்தர் சிங் (வயது 79) முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார். அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த ஆட்சியில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவின் வடிவில் இடையூறு ஏற்பட்டது.

முதலில் அமரிந்தர் சிங் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த சித்து பின்னர் அதில் இருந்து வெளியேறினார். பின்னர் கட்சியில் இருந்தவாறே அமரிந்தர் சிங்கின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார்.

இதனால் முதல்-மந்திரிக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது உட்கட்சி பூசலாக விசுவரூபம் எடுத்தது. இது கட்சித்தலைமைக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியது.

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த உட்கட்சி பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்சித்தலைமை களத்தில் இறங்கியது.

இதில் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக அதிரடியாக அறிவித்தது. இதற்கு அமரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவரது எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கையை கட்சித்தலைமை மேற்கொண்டது.

இதன்மூலம் மாநில அரசில் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் உட்கட்சி பூசல் விசாலமானது. முதல்-மந்திரி அமரிந்தர் சிங்குக்கு எதிராக பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.

இந்த தொடர் நடவடிக்கைகளால் மனமுடைந்த அமரிந்தர் சிங் கடந்த மாதம்19-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அமரிந்தர் சிங்கின் பதவி விலகலுக்குப்பின் சித்துவின் ஆதரவாளராக கருதப்பட்டு வந்த மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியாக நியமித்தது. அவரும் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.

அதேநேரம், மாநில காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து அரங்கேறி வந்த திருப்பங்களுக்கு காரணமாக இருந்த சித்துவும் நேற்று முன்தினம் தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணத்தை விளக்கி வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார்.

இதில் மாநிலத்தின் புதிய மந்திரிகள், அதிகாரிகள் நியமனங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதன் மூலம் அவரது விருப்பத்துக்கு மாறான நியமனங்களை முன்வைத்தே ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க பஞ்சாப் அரசியலில் முதுபெரும் தலைவராக விளங்கி வரும் அமரிந்தர் சிங்கின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பின. அவர் தனிக்கட்சி தொடங்குவார் எனவும், பா.ஜனதாவில் இணைவார் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த சூழலில் நேற்று முன்தினம் அவர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் டெல்லியில் சந்தித்தார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதாவுடனான அமரிந்தர் சிங்கின் இந்த நெருக்கமான நடவடிக்கைகளால் அவர் பா.ஜனதாவில் இணையக்கூடும் என்ற சந்தேகங்கள் வலுத்தன.

ஆனால் இதை அமரிந்தர் சிங் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியில் நான் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை யாரும் நம்பவில்லை.

என்னை இப்படி நடத்தி இருக்கக்கூடாது. இதுபோன்ற அவமானங்களை நான் ஏற்கமாட்டேன். இதற்கு மேலும் காங்கிரசில் இருக்க எனது கொள்கைகளும், நம்பிக்கையும் என்னை அனுமதிக்கவில்லை.

எனவே நான் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறேன்.

நான் பா.ஜனதாவில் இணையமாட்டேன். ஆனால் காங்கிரசிலும் இருக்கப்போவது இல்லை.

பஞ்சாப் மாநிலத்தின் நலனை கருதி எனது எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறேன். ஏனெனில் மாநிலத்தின் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம் ஆகும்.

காங்கிரசின் எதிர்காலத்துக்கு நல்ல சிந்தனையாளர்களாகிய மூத்த தலைவர்கள் மிகவும் முக்கியம். அவர்கள் வகுக்கும் திட்டங்களை செயல்படுத்த இளம் தலைமையை கட்சித்தலைமை ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக கட்சியில் மூத்த தலைவர்கள் அனைவரும் முற்றிலும் ஓரங்கட்டப்படுகின்றனர். இது கட்சிக்கு நல்லதல்ல.

இவ்வாறு அமரிந்தர் சிங் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் சித்து மீது கடும் குற்றச்சாட்டுகளையும் அமரிந்தர் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சித்து வெறும் ஒரு கூட்டம் சேர்ப்பவர் மட்டுமே. அவரால் ஒரு குழுவை எப்படி வழிநடத்த முடியும்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதைப்போல மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் வீட்டு முன் காங்கிரசார் போராட்டம் நடத்தியதையும் அவர் கண்டித்து உள்ளார்.

பஞ்சாப்பில் காங்கிரசின் முகமாக இருந்து வந்த அமரிந்தர் சிங், கட்சியில் இருந்து விலகுவது காங்கிரசுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 20 சதவீத சரிவு ஏற்படும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் அமரிந்தர் சிங்கின் விலகலால் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி மாநில அரசில் அமரிந்தர் சிங்கின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கணிசமாக உள்ளனர். தற்போது அமரிந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறுவதால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூலம் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து மாநில அரசு எப்படி மீண்டு வரும் என்பது வருகிற நாட்களில் தெரியும்.

Next Story