டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியது - மத்திய இணை மந்திரி


டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியது - மத்திய இணை மந்திரி
x
தினத்தந்தி 6 Oct 2021 4:59 AM GMT (Updated: 6 Oct 2021 4:59 AM GMT)

டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியதாக மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். திகுனியா என்ற பகுதியில் அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்த போது அங்கு குவிந்த விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து வன்முறை மூண்டது. இதில் மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் மீது மோதிய காரில் தனது மகன் பயணிக்கவில்லை என்று மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில், கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் டிரைவர் படுகாயமடைந்தார். இதனால், அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியது. அங்கிருந்தவர்கள் மீது மோதிய காரில் எனது மகன் பயணிக்கவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்றார்.

Next Story