உத்தரபிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை: மத்திய மந்திரி மகன் அதிரடி கைது


உத்தரபிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை: மத்திய மந்திரி மகன் அதிரடி கைது
x
தினத்தந்தி 9 Oct 2021 9:55 PM GMT (Updated: 9 Oct 2021 9:55 PM GMT)

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்ட வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 6 பேர் பலியாகினர்.விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

மந்திரி மகன் ஆஜர்
இந்தக் குற்றச்சாட்டை மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மறுத்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் 2-வது முறையாக சம்மன் அனுப்பினர். அந்த சம்மன், அஜய் மிஸ்ராவின் வீட்டில் ஒட்டப்பட்டது.இந்நிலையில், சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, லகிம்பூர் கேரி போலீஸ் லைனில் உள்ள குற்றவியல் பிரிவு சிறப்பு விசாரணைக் குழுவின் முன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று காலை 10.35 மணிக்கு ஆஜரானார். அதற்காக ஒரு மொபட்டில் வந்த அவர், ஊடகத்தினரை தவிர்க்கும் வகையில் பின்வாசல் வழியாக போலீஸ் கட்டிடத்தினுள் நுழைந்தார். அவரிடம், டி.ஐ.ஜி. உபேந்திர அகர்வால் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு டி.ஐ.ஜி. தலைமையிலான இந்த 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஒட்டுமொத்த விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

40 கேள்விகள்
ஆஷிஷ் மிஸ்ராவிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால் ஆஷிஷ் மிஸ்ராவிடம் கேட்பதற்கு 40 கேள்விகளை போலீசார் தயார் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.விவசாயிகள் மீது கார் மோதியபோது தான் அங்கில்லை என நிரூபிக்கும் விதமாக வேறு இடங்களில் இருந்ததாக வீடியோ காட்சிகள் கொண்ட பல பென் டிரைவ்களை ஆஷிஷ் மிஸ்ரா கொண்டு வந்திருந்தார். அவரது எழுத்துப்பூர்வ விளக்கமும், அவருடைய வக்கீல் அவதேஷ்குமார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 11 மணி நேர விசாரணைக்குப் பின் நேற்று இரவு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

போராட்டத்தை முடித்தார் சித்து
இதற்கிடையே, மத்திய மந்திரி மகனிடம் விசாரணை நடத்தக் கோரி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து, லகிம்பூர் கேரி வன்முறையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ராம் காஷ்யப்பின் வீட்டின் முன் அமைதிப் போராட்டம் நடத்தி வந்தார். விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானதை தொடர்ந்து சித்து நேற்று தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார். ‘இது உண்மைக்கும், விவசாயிகளின் குடும்பத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி’ என்று அவர் கூறினார்.

உடன் இருந்தவர் இருப்பிடங்களில் சோதனை
இதற்கிடையில், விவசாயிகள் மீது மோதிய காரில் ஆஷிஷ் மிஸ்ராவுடன் இருந்ததாக கூறப்படும் அங்கித் தாசின் லக்னோ இருப்பிடங்களில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கித் தாஸ் மாயமாகிவிட்டதால், அவருடைய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story