5 மாநில ஐகோர்ட்டுகளுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


5 மாநில ஐகோர்ட்டுகளுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2021 4:26 AM GMT (Updated: 10 Oct 2021 4:26 AM GMT)

5 மாநில ஐகோர்ட்டுகளுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் பரிந்துரைத்தது.

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிந்தலை அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ரஞ்சித் வி.மோரை மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.சி.சர்மாவை தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் நியமிக்கவும்,

மத்தியபிரதேச ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவை கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், இமாசலபிரதேச ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.வி.மலிமத்தை மத்தியபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் அஸ்வதியை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் நியமிக்கவும்,

நீதிபதி பிரசாந்த்குமார் மிஷ்ராவை ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், நீதிபதி அரவிந்த்குமாரை குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் பரிந்துரைத்தது.

மேலும் 5 மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்யவும் கொலிஜீயம் பரிந்துரை செய்தது.

ஆந்திரபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரூப்குமாரை சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், மத்தியபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முகமது ரபிக்கை இமாசலபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், திரிபுரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அகில் குரேஷியை ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரஜீத் மகந்தியை திரிபுரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிஸ்வந்த் சோமாதீரை சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் பரிந்துரைத்தது.

இவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேற்கண்ட நியமனங்களை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story