அயோத்தி ராமர் கோவில் கருவறையை ஒளிரச்செய்ய சூரியக்கதிர்கள்: அறக்கட்டளை தகவல்


அயோத்தி ராமர் கோவில் கருவறையை ஒளிரச்செய்ய சூரியக்கதிர்கள்: அறக்கட்டளை தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2021 5:17 PM GMT (Updated: 17 Oct 2021 5:17 PM GMT)

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கருவறையில் சூரிய கதிர்கள் ஒளிரும்படி கட்டப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோவிலின் கருவறையில் சூரிய கதிர்கள் ஒளிரும்படி கட்டப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி திரத் சேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் கூறுகையில்,

ஒவ்வொரு ராம நவமியின் போதும் சூரியக் கதிர்கள் கருவறையில் உள்ள ராமரின் மீது விழுந்து அழகுபடுத்தும் விதத்தில் கோவிலை வடிவமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இது தொடர்பாக விஞ்ஞானிகள், வானியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த வடிவமைப்பு ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூரியக் கோவிலை போன்றதாக இருக்கும் என்று அவர் கூறினார். 

அறக்கட்டளையின் மற்றொரு மூத்த அதிகாரி கூறுகையில், ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் 2023-க்குள், கருவறையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன. அஸ்திவாரத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டம் நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிலின் மேல்மட்ட கட்டுமானம் ஏப்ரல் 2022 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். கோவிலைக் கட்டுவது தொடர்பாக முந்தைய திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அவர், கோபுரத்தின் வடிவத்தில் சிறிது மாற்றங்கள் இருக்கும் என்று கூறினார்.

கோவிலில் அருங்காட்சியகம், காப்பக அறை, ஆராய்ச்சி மையம், சுற்றுலா மையம், நிர்வாக கட்டிடம், யோகா மையம் மற்றும் பிற வசதிகள் இருக்கும் என்றும்  அறக்கட்டளையின்  மூத்த அதிகாரி தெரிவித்தார்.


Next Story