59 அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பு: மத்திய மின்சார ஆணையம்


59 அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பு: மத்திய மின்சார ஆணையம்
x
தினத்தந்தி 21 Oct 2021 8:52 PM GMT (Updated: 21 Oct 2021 8:52 PM GMT)

நாடு முழுவதும் 59 அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்து உள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு நீடிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பரவலாக நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல மாநிலங்கள் மின் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. எனவே மின்வெட்டை அமல்படுத்தும் நிலைக்கும் சென்று உள்ளன.

கடந்த சில நாட்களாக நிலவி வரும் இந்த நிலக்கரி தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்து உள்ளது. அந்தவகையில் நாட்டின் 59 அனல் மின் நிலையங்களில் வெறும் 4 நாட்களுக்கு தேவையான (சூப்பர்0கிரிட்டிக்கல் ஸ்டாக்) நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

165 ஜிகாவாட் மின் உற்பத்தி

அதேநேரம் இந்த தட்டுப்பாடுகள் மெல்ல சீரடைந்து வருவதும் இந்த தரவுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் சூப்பர் கிரிட்டிக்கல் ஸ்டாக் கொண்ட அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 13-ந்தேதி 64 ஆகவும், பின்னர் 19-ந்தேதி 61 ஆகவும் இருந்தது.

நிலக்கரி கையிருப்பு இல்லாத அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை 17 ஆக இருந்த நிலையில், நேற்று இது 15 ஆக குறைந்திருக்கிறது.

இதைப்போல ஒரு நாளுக்கான நிலக்கரி கையிருப்பு கொண்டுள்ள அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கையும் 27-ல் இருந்து 21 ஆக சரிந்து இருக்கிறது. மேலும் 2 நாள் கையிருப்பு கொண்ட மின் நிலையங்களின் எண்ணிக்கையும் 20-ல் இருந்து 18 ஆக குறைந்திருக்கிறது.

நாட்டின் 135 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பை மத்திய மின்சார ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த அனல் மின் நிலையங்கள் மூலம் 165 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மின்தேவை குறையும்

இதற்கிடையே நாட்டின் மின்தட்டுப்பாடு அளவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 13-ந்தேதி நிலவரப்படி 5,621 மெகா வாட் மின்சார தட்டுப்பாடு இருந்த நிலையில், இது 4,454 மெகா வாட்டாக தற்போது குறைந்திருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் தொடங்கி இருப்பதால் மின் தேவை படிப்படியாக குறையும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதைப்போல மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளின் பலனாக, நிலக்கரி தட்டுப்பாடும் நீங்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


Next Story