குஜராத்; பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் - மாநில அரசு தொடங்கியது


குஜராத்; பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் - மாநில அரசு தொடங்கியது
x
தினத்தந்தி 28 Oct 2021 7:51 PM GMT (Updated: 28 Oct 2021 7:51 PM GMT)

குஜராத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தை மாநில அரசு தொடங்கியது.

ஆமதாபாத்,

குஜராத்தின் 9 பெருநகரங்களில் பிச்சை எடுப்போர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மாநில அரசு வகுத்துள்ளது. முதற்கட்டமாக இது வதோதராவில் தொடங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த திட்டத்தின்படி, பிச்சை எடுப்போர் மற்றும் ஆதரவற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவர். அங்கு அவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் சொந்தக்காலில் நின்று, புது வாழ்க்கை தொடங்குவதற்கு தகுதியான நிலையை எட்டும் வரையில் அங்கேயே அவர்கள் பராமரிக்கப்படுவர். அவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு வாங்கவும் உதவி செய்யப்படும். அத்துடன் அவர்களுக்கு என நிரந்தர அடையாள எண் கொடுத்து, அது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். 

இதன் மூலம் அவர்கள் மீண்டும் பிச்சை எடுப்பதை கண்காணிக்கப்படும்.இந்த திட்டத்தை மாநில சமூக நலத்துறை மந்திரி மணிஷா வாகில் நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் வதோதரா நகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கினார்.

Next Story