குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் மசோதா பாக். பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்


குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் மசோதா பாக். பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 17 Nov 2021 1:21 PM GMT (Updated: 17 Nov 2021 1:21 PM GMT)

தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு அனுமதிக்கும் வகையிலான மசோதா பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லாகூர்,

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு (வயது 50), அந்த நாட்டின் ராணுவ கோர்ட்டு 2017-ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து இந்திய தரப்பில் திஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் கோர்ட்டு, ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துமாறு கூறியது. 

இந்தியா தூதரக ரீதியில் ஜாதவை அணுகவும் அனுமதிக்குமாறு தீர்ப்பில் கூறப்பட்டது. மேலும், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாதவ் மேல் முறையீடு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, ’சர்வதேச நீதிமன்றத்தின் மறுஆய்வு மற்றும் மறுபரிசீலனை 2020’ மசோதாவை கடந்த ஆண்டு மே மாதம் 20-ம் தேதி பாகிஸ்தானில் இயற்றப்பட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து குல்பூஷன் ஜாதவ் மேல் முறையீடு அனுமதிக்கும் வகையிலான மசோதா பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவ் தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தானில் உள்ள கோட்டில் மேல் முறையீடு செய்யலாம். இது குல்பூஷன் ஜாதவிற்கு தனது தரப்பு வாதங்களை முன்வைக்க கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story