எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பஞ்சாப் அரசு முறையீடு


எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பஞ்சாப் அரசு முறையீடு
x
தினத்தந்தி 11 Dec 2021 2:52 PM GMT (Updated: 11 Dec 2021 2:52 PM GMT)

எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு நீட்டிப்பு தொடர்பாக மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது இது எனவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகலாந்து, மிசோரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உள்ள எல்லைகளில் எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், எல்லையோரம் உள்ள மாநிலங்களின் குறிப்பட்ட தூரம் வரை மாநில அரசின் அனுமதியின்றி சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், பஞ்சாப், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களில் எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிற்கு மாநில அரசின் அனுமதியின்றி எல்லைப்பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

அண்மையில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய அரசு நீட்டித்தது. அதன்படி, மேற்குவங்காளம், பஞ்சாப், அசாம் ஆகிய 3 மாநிலங்களிலும் எல்லைப்பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லைப்பாதுகாப்பு படையினர் தங்கள் அதிகார வரம்பை செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பை நீட்டித்ததற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப் அரசு இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு நீட்டிப்பு தொடர்பாக மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது இது எனவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. 

Next Story