பாலியல் வன்கொடுமை: கடிதம் எழுதி வைத்துவிட்டு 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
தன்னை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பார்மீர் மாவட்டம் ரிகோ கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுமி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த ஒரு கடித்ததையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தன்னை அதே பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார், கார்த்திக் ஆகிய இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த இருவரும் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், தான் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக அந்த சிறுமி தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தற்கொலைக்கு காரணமான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story