பெங்களூரு: நடுவானில் இண்டிகோ விமானங்களின் மோதல் நூலிழையில் தவிர்ப்பு..!


பெங்களூரு: நடுவானில் இண்டிகோ விமானங்களின் மோதல் நூலிழையில் தவிர்ப்பு..!
x
தினத்தந்தி 19 Jan 2022 11:59 AM GMT (Updated: 19 Jan 2022 11:59 AM GMT)

கெம்பகெவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடுவானில் இண்டிகோ விமானங்களின் மோதல் தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு,

கடந்த ஜனவரி 7-ம் தேதி கெம்பகெவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதையில் இருந்து ஒரே நேரத்தில் ஒரே திசையில் பயணித்ததால் மோத இருந்த இரண்டு விமானங்கள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பித்தன.

கெம்பகெவுடா சர்வதேச விமானநிலையத்தில் வடக்கு ஓடுபாதை மற்றும் தெற்கு ஓடுபாதை என்று இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. இந்த ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் ஒரே நேரத்தில் புறப்பட அனுமதிக்கப்படுவதில்லை. 

முன்னதாக ஜனவரி 7-ம் தேதி அன்று வடக்கு ஓடுபாதை புறப்படுவதற்கும் தெற்கு ஓடுபாதை வருகைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக வந்த ஷிப்ட் பணியாளர் தெற்கு ஓடுபாதையை மூட முடிவு செய்துள்ளார். ஆனால் அவர், இதை தெற்கு ஓடுபாதை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்கத் தவறிவிட்டார்.

இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் கொல்கத்தா செல்லும் 6E 455 விமானமும் புவனேஸ்வருக்கு செல்லும் 6E 246 விமானமும் ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் இருந்து புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் ஒரே நேரத்தில் புறப்பட்ட இரண்டு விமானங்களும் ஒன்றுக்கொன்று மோத இருந்தன. இதையடுத்து விமானநிலையத்தின் ரேடார் கன்ட்ரோலர் விடுத்த எச்சரிக்கையின் பேரில் இந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து டிஜிசிஏ விசாரித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

Next Story