கொரோனா 3-வது அலை உச்சம் தொடுவது எப்போது? - கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி கணிப்பு


கொரோனா 3-வது அலை உச்சம் தொடுவது எப்போது? - கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி கணிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 1:21 AM GMT (Updated: 2022-01-20T06:51:05+05:30)

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை எப்போது உச்சம் தொடும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி கணித்துக்கூறி உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை வீசி வருகிறது. தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த அலை எப்போது உச்சம் தொடும் என்ற கேள்வி வலுத்து வருகிறது. இதுபற்றி பேராசிரியரும், கொரோனா சூத்ரா மாதிரியுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளருமான கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானி மணீந்திர அகர்வால் கணித்துள்ளார். அவர் கூறியதாவது:-

டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா 3-வது அலை ஏற்கனவே உச்சம் தொட்டு விட்டது. மராட்டியம், கர்நாடகம், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் இந்த வாரமும், ஆந்திரா, அசாம், தமிழ்நாட்டில் அடுத்த வாரமும் உச்சம் தொடும்.

ஜனவரி 23-ந் தேதி தேசிய அளவில் 3-வது அலை உச்சம் தொடும். ஆனாலும் தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்குள்தான் இருக்கும். 11-ந் தேதி வரையிலான தரவுகளைக் கொண்ட பாதையானது, ஒரு நாளில் கிட்டத்தட்ட 7.2 லட்சம் பாதிப்புகளுடன் ஜனவரி 23-ந் தேதி உச்சநிலையை காட்டுகிறது. உண்மையான பாதை ஏற்கனவே கணிசமாக விலகுகிறது. எனவேதான் தினசரி பாதிப்பு 4 லட்சத்தைக் கடக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறேன்.

நாடு முழுவதும் பாதைகள் கணிசமாக மாறி வருகின்றன. இதற்கு மாற்றப்பட்ட சோதனை உத்திக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்கள் காரணமாக இருக்கலாம் என்று நான் முன்பே ஊகித்தேன். இருந்தாலும் பல இடங்களிலும், இந்த வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படவில்லை. இன்னும் பாதை மாறி விட்டது.

மக்கள் தொகையில் 2 பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர், ஒமைக்ரானுக்கு எதிராக குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். மற்றொரு பிரிவினர், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். முதல் பிரிவினரில் தொற்று பரவியதால் அதிகம் பேர் கூர்மையான பாதிப்புக்குள்ளாகினர். இப்போது முதல் பிரிவினருக்கு தொற்று தீர்ந்து விட்டது. எனவே பரவல் மெதுவாக உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஒமைக்ரான் பரவத்தொடங்கியபோது நிறைய கவலைகள் இருந்தன. இருப்பினும் கடந்த வாரம் அல்லது அதற்கு மேலாக கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இந்த ஒமைக்ரான் மாறுபாடு லேசான நோய்த்தொற்றை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைக்கு பதிலாக நிலையான மருத்துவ சிகிச்சை மூலம் அதை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story