குடியரசு தின விழா: இன்று முதல்முறையாக வான் சாகசத்தில் 75 போர் விமானங்கள்...!! + "||" + From fly-past of 75 aircraft to display of 10 scrolls to drone show - Things going to happen for first time this Republic Day
குடியரசு தின விழா: இன்று முதல்முறையாக வான் சாகசத்தில் 75 போர் விமானங்கள்...!!
தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தினவிழாவில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் வானில் பறந்து சாகச செயல்களில் ஈடுபடுகின்றன.
புதுடெல்லி,
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று (புதன்கிழமை) தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் நடைபெறுகின்றன.
‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தை’ முன்னிட்டு இந்த ஆண்டு ராஜபாதையில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து செல்லும். அவை வீரசாகசங்களை வானில் நடத்திக்காட்டும்.
இதில் பழமையான விமானங்கள் தொடங்கி இன்றைய நவீன ரபேல், சுகோய், ஜாகுவார் எம்ஐ-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா விமானங்கள் ராஹத், ஏகலைவா, திரிசூல், திரங்கா, விஜய், அம்ரித் உள்ளிட்ட பல வடிவங்களை வானில் வடிவமைத்து காட்டுவது கண்கொள்ளாக்காட்சியாக மலரும்.
நாடு முழுவதும் போட்டிகளின் மூலம் தேர்வு பெற்ற நடனக்கலைஞர்களின் ஆட்டம், குடியரசு தின விழா களைகட்ட வைக்கும்.
இந்த போட்டிகளில் 323 குழுக்கள் மூலமாக 3,870 பேர் பங்கேற்று இறுதியில் 480 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நமது கண்களுக்கும், செவிகளுக்கும் திகட்டாத விருந்து படைப்பார்கள்.
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அனைவரும் தெளிவாக, அழகாக கண்டு மகிழ ஏதுவாக ராஜபாதையின் இருபுறங்களில் தலா 5 என 10 பிரமாண்ட திரைகள் வைக்கப்படுகின்றன.
நாம் நேரில் கண்டுகளிக்க வழியில்லையே என்ற ஆதங்கம் நாட்டு மக்களுக்கு தேவையில்லை.இந்த குடியரசு தின விழா கோலாகலங்களை தொலைக்காட்சி நேரடியாக இன்று ஒளிபரப்புகிறது. இந்த தகவல்ளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.