தேசிய செய்திகள்

தேசிய கட்சிகளின் சொத்து கணக்கு விவரம் - பா.ஜனதா முதலிடம் + "||" + Property Account Details of National Parties BJP First

தேசிய கட்சிகளின் சொத்து கணக்கு விவரம் - பா.ஜனதா முதலிடம்

தேசிய கட்சிகளின் சொத்து கணக்கு விவரம் - பா.ஜனதா முதலிடம்
தேசிய கட்சிகளின் சொத்து கணக்கில் பா.ஜனதா கட்சி முதலிடத்தில் இருக்கிறது.
புதுடெல்லி,

2019-2020 நிதியாண்டில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றை தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு, அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

நிலையான சொத்துகள், கடன் மற்றும் முன்தொகை, வைப்புநிதி, மூலத்தில் வரி பிடித்தம், மூலதனம் மற்றும் இதர சொத்துகள் என 6 இனங்களின் கீழ் சொத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, அந்த நிதியாண்டில், பா.ஜனதா தனக்கு ரூ.4 ஆயிரத்து 874 கோடி சொத்து இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளது. தேசிய கட்சிகளில் சொத்து கணக்கில் பா.ஜனதாதான் முதலிடத்தில் இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, ரூ.698 கோடி சொத்துகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் ரூ.588 கோடி சொத்துகளுடன் காங்கிரஸ் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (ரூ.569 கோடி), திரிணாமுல் காங்கிரஸ் (ரூ.247 கோடி), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (ரூ.29 கோடி), தேசியவாத காங்கிரஸ் (ரூ.8 கோடி) ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எல்லா கட்சிகளும் வைப்புநிதியில்தான் அதிக சொத்துகளை வைத்துள்ளன. பா.ஜனதாவுக்கு வைப்புநிதியாக மட்டும் ரூ.3 ஆயிரத்து 253 கோடி உள்ளது.

மாநில கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி ரூ.563 கோடியே 47 லட்சம் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூ.301 கோடியே 47 லட்சத்துடன் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. ரூ.267 கோடியே 61 லட்சத்துடன் 3-வது இடத்திலும் இருக்கின்றன.

மாநில கட்சிகளும் வைப்புநிதியில்தான் அதிக சொத்துகளை வைத்துள்ளன. சமாஜ்வாடி கட்சி ரூ.434 கோடியே 21 லட்சமும், அ.தி.மு.க. ரூ.246 கோடியே 90 லட்சமும், தி.மு.க. ரூ.162 கோடியே 42 லட்சமும் வைப்புநிதியாக அந்த நிதியாண்டில் வைத்திருந்ததாக அறிவித்துள்ளன.