ஹிஜாப் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது.
இதையடுத்து, முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பின்னர், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6 மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story