சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் சொத்துகள் முடக்கம்
சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி. தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பண மோசடி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபரில் விசாரணை நடத்தினர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரின் பணமோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த குதிரை, பாரசீக பூனை உள்பட ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் சமீபத்தில் விசாரணை மேற்கொண்ட அமலாக்க துறை அதிகாரிகள் ரூ.7.27 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை முடக்கினர். அவற்றில் ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை சுகேஷ் கொடுத்திருக்கிறார் என அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர்.
இதுதவிர, நடிகை ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சுகேஷ் 1 லட்சத்து 73 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 27 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அளவுக்கு பணமும் கொடுத்து வைத்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றும் விடப்பட்டு இருந்தது. அதனால், கடந்த டிசம்பரில் வெளிநாடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story