மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏறவிடாமல் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாக புகார்; இண்டிகோ நிறுவனம் விளக்கம்


மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏறவிடாமல் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாக புகார்; இண்டிகோ நிறுவனம் விளக்கம்
x
தினத்தந்தி 9 May 2022 3:49 AM GMT (Updated: 2022-05-09T09:19:43+05:30)

இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தனர் என்று சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.

ராஞ்சி, 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தனர் என்று சமூக வலைதளங்களில் நேற்று பதிவிடப்பட்டு கண்டனத்திற்கு உள்ளானது.

அந்த பதிவில் கூறப்பட்டதாவது, ‘மாற்றுத்திறனாளி குழந்தை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என இண்டிகோ ஊழியர்கள் அறிவித்தனர். அவரால் மற்ற பயணிகளுக்கு ஆபத்து. அவர் பயணத்திற்கு தகுதியானவராக இருப்பதற்கு முன்பு, முதலில் அவர் சாதாரண மனிதரை போல ஆக வேண்டும். குடிபோதையில் உள்ளவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தகுதியற்றவர்கள். அதை போலவே இந்த பயணியும்’ என்று பதிவிடப்பட்டது.

இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மே 7 அன்று சிறப்புத் திறன் கொண்ட குழந்தை ஒன்று தனது குடும்பத்தினருடன் விமானத்தில் ஏற முடியவில்லை. அவர் பீதியில் இருந்தார். கடைசி நிமிடம் வரை மைதான ஊழியர்கள் அவரை அமைதிபடுத்த முயற்சித்தும் பலனில்லை. அவர் பயத்தில் இருந்தார்.

ஆகவே, விமான நிறுவனம் அந்த குடும்பத்திற்கு ஒரு ஓட்டலில் தங்க வசதியை அளித்து அவர்களை வசதியாக தங்க செய்தது. இன்று காலை அந்த குடும்பம், அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி விமானத்தில் பயணித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புத் திறன் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவன விமானங்களில் பயணிக்கின்றனர். இண்டிகோ ஊழியர்களாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இருப்பதில் இண்டிகோ பெருமை கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்மூலம், சமூக வலைதளங்களில் நேற்று பதிவிடப்பட்டு கண்டனத்திற்கு உள்ளான தகவல் பொய் என்று இண்டிகோ நிறுவனம் விளக்கியுள்ளது.


Next Story