அழகுக்காக அறுவை சிகிச்சை; கன்னட டி.வி. நடிகை பரிதாப சாவு


அழகுக்காக அறுவை சிகிச்சை; கன்னட டி.வி. நடிகை பரிதாப சாவு
x
தினத்தந்தி 17 May 2022 7:38 PM GMT (Updated: 2022-05-18T01:08:57+05:30)

அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது டி.வி. நடிகை திடீரென மரணம் அடைந்தார்.

டி.வி. நடிகை

கன்னட சின்னத்திரை பிரபல இளம் நடிகையாக வலம் வந்தவர் சேத்தனா ராஜ் (வயது 21). இவர், ‘கீதா’, ‘தோரேசானி’, ‘ஒலவின நில்தன’ ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். பெங்களூரு புறநகர் மாவட்டம் வீரேனபாளையா கிராமத்தை சேர்ந்த இவர், பெங்களூரு நகரில் வசித்து வந்தார். சேத்தனா ராஜ், உடல் பருமனாக காணப்பட்டதால் அவரிடம் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டு மிகவும் அழகாக மாறும்படி தோழிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து சேத்தனா ராஜ் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய சேத்தனா ராஜ் முடிவு செய்து உள்ளார்.

அறுவை சிகிச்சை

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அறுவை சிகிச்சை செய்ய தனது நண்பர் ஒருவருடன் சேத்தனா ராஜ் சென்றார். நேற்று அதிகாலை சேத்தனா ராஜிக்கு டாக்டர்கள் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது நுரையீரல் பகுதியில் சேத்தனா ராஜூக்கு நீர் கோர்த்ததாக தெரிகிறது. இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறினார். மேலும் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சேத்தனா ராஜை பசவேஸ்வராநகரில் உள்ள இருதய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

ஆனாலும் அங்கு கொண்டு செல்வதற்குள் சேத்தனா ராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சேத்தனா ராஜ் இறந்த தகவலை அவரது பெற்றோரிடம், டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் சேத்தனா ராஜ் உயிரிழந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.


Next Story