ரதயாத்திரையில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்
மத ரதயாத்திரையின் போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அகர்தலா,
திரிபுரா மாநிலம் உனகொடி மாவட்டம் சவுமுஹினி பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான ஜகன்நாத் கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா நடைபெற்றது.
திருவிழாவின் ஒரு பகுதியாக கடவுள் சிலையுடன் தேரோட்டம் நடைபெற்றது. இரும்பு சட்டத்தால் ஆன தேர் முக்கிய வீதியில் சென்றபோது மின் கம்பி மீது உரசியது. தேர் மீது மின்கம்பி உரசியதால் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தேர் மீது அமர்ந்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் மின்சாரம் பாய்ந்து தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.