அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்


அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்
x

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அதிமுகவின் பொதுக்குழு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11-ல் சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சேர்ந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் அணியினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தீர்ப்பளித்தது மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எவரேனும் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேவியட் மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.


Next Story