ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்
மோடி பெயர் குறித்த அவதூறு தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
ராகுல்காந்தி தகுதிநீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போர்க்கோலம் பூண்டுள்ளது. இந்த பிரச்சினைகளை முன்வைத்து நேற்று கருப்பு சட்டை ஊர்வலமும் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டங்களை பா.ஜனதா குறைகூறியுள்ளது. இவ்வாறு நாடகம் ஆடுவதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சாடியுள்ளது.
இந்தநிலையில், ராகுல் காந்தி தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இன்று காலையில் ராகுல் காந்தி மீது பாஜக புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. அதில், முன்பு தான் சொன்ன கருத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்புக் கேட்ட காங்கிரஸ் தலைவர் இப்போது தான் ஒரு கோழை இல்லை என்பது போல நடிப்பதாக கூறியிருந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி,
"பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதால் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. முன்பு சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்புக் கேட்ட அவர் இப்போது தான் ஒரு கோழை இல்லை என்பதாக காட்டிக்கொள்கிறார். ஒரு தனிமனிதனை அவமானப்படுத்தியதற்காக இல்லாமல், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்ததற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
பிரதமர் மோடியை அவமதிப்பதாக நினைத்து, ராகுல் காந்தி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி குடும்பம், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை அவமரியாதையாக பேசுவது இது முதல் முறையில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பக்குவம் ராகுல் காந்திக்கு இல்லாதது காந்தி குடும்பத்தின் மற்றொரு அரசியல் ஆணவத்தினைக் காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.