மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் கணவருடன் வீடு திரும்பிய பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேருக்கு ஆயுள்


மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் கணவருடன் வீடு திரும்பிய பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேருக்கு ஆயுள்
x

மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கணவருடன் பைக்கில் வீடு திரும்பிய பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அகர்தலா,

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டம் கிலா பகுதியை சேர்ந்த கணவன் தனது மனைவியுடன் கடந்த 2021-ம் ஆண்டும் நவம்பர் 20-ம் தேதி மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு பைக்கில் கணவன் - மனைவி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் சென்ற பைக்கை 5 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்தது. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது அந்த கும்பல் தம்பதி சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில், கணவன் - மனைவி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த கும்பல் கணவனை தாக்கிவிட்டு அவரது மனைவியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் கடத்தி சென்றது. அங்கு அந்த பெண்ணை அந்த 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மறுநாள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி பெண்ணை காட்டுப்பகுதிக்குள் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சோனமுரா பகுதியை சேர்ந்த தஜிமுல் இஸ்லாம், சதாம் ஹுசேன், ரபின் அலி, சமிமென் அலி, துடு மிஹா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு கோமதி மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதையடுத்து, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தஜிமுல் இஸ்லாம், சதாம் ஹுசேன், ரபின் அலி, சமிமென் அலி, துடு மிஹா 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது. தண்டனையை தொடர்ந்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story