மாரடைப்பால் உயிரிழந்த உரிமையாளரின் உடல் அருகே நாள் முழுவதும் நின்ற செல்லப்பிராணி நாயின் பாசம்...!
மாரடைப்பால் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் அருகேயே செல்லப்பிராணி நாய் நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமலி பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கேகே சோமன்(வயது 67). இவருக்கு கீதா என்ற மனைவியும் மோனிஷா என்ற மகளும் உள்ள நிலையில் சோமன் பல ஆண்டுகளாக அடிமலி பகுதியில் தனியாக வசித்துவந்துள்ளார். இவர் செல்லப்பிராணி நாய் ஒன்றை தன்னுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்கு உன்னிகுட்டன் என்ற பெயரிட்டுள்ளார்.
செல்லப்பிராணி நாய் உன்னிகுட்டனுடன் தனியாக வசித்து வந்த சோமனை அதே பகுதியில் வசித்து வரும் அவரின் உறவினர்கள் அவ்வப்போது வந்து நலம் விசாரித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை சோமனின் உறவினரான உமேஷ் அவரை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், செல்போன் அழைப்பிற்கு சோமன் பதில் அளிக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உமேஷ் ஞாயிற்றுக்கிழமை சோமன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளது. செல்லப்பிராணி நாய் உன்னி குட்டன் வீட்டிற்குள் நின்று குரைத்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த உமேஷ் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு வீட்டின் குளியலறையில் சோமன் வீழே விழுந்துகிடப்பதை கண்டு உமேஷ் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து போலீசாருக்கும், மருத்துவத்துறையினருக்கும் உமேஷ் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த மருத்துவத்துறையினர் சோமனின் வீட்டிற்கு வந்தனர். ஆனால், சோமன் விழுந்து கிடந்த குளியல் அறை பகுதிக்கு மருத்து ஊழியர்களை செல்லவிடாமல் செல்லப்பிராணி உன்னிக்குட்டன் குரைத்துக்கொண்டிருந்தது. பின்னர், உமேஷின் உதவியுடன் சோமன் விழுந்து கிடந்த பகுதிக்கு மருத்துவ ஊழியர்கள் சென்று அவரை பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் சோமன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோமன் உயிரிழந்து கிடந்த குளியல் அறை பகுதிக்கு செல்ல முற்பட்டனர். அப்போதும், செல்லப்பிராணி நாய் போலீசாரை குளியலறை பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து குரைத்துக்கொண்டிருந்தது.
பின்னர், உமேஷை கண்டதும் செல்லப்பிராணி உன்னிகுட்டன் குரைப்பதை நிறுத்தியது. இதனை தொடர்ந்து உயிரிழந்த சோமனின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சோமன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரேதபரிசோதனைக்கு பின் சோமனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
சோமன் மாரடைப்பால் சனிக்கிழமையே உயிரிழந்துள்ளார் என்பதும் அப்போது முதல் மறுநாள் வரை செல்லப்பிராணி உன்னிகுட்டன் சோமனின் உடல் அருகேயே நின்று கொண்டிருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் அருகேயே நாள் முழுக்க செல்லப்பிராணி நாய் நின்றுகொண்டிருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.