வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
பெங்களூருவில் 25-க்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதில் அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பெங்களூரு:-
வரி ஏய்ப்பு
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் பெரிய அளவில் தங்க நகைக்கடைகள் உள்ளன. அங்கு தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக இங்கு வந்து நகைகளை வாங்கி செல்கிறார்கள். ஆனால் அந்த நகைக்கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென பெங்களூருவில் உள்ள நகைக்கடைகள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். ஜெயநகர், காந்திநகர், பனசங்கரி, பசவனகுடி, யஷ்வந்தப்புரா, சிக்பேட்டை, மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு
இந்த சோதனையின்போது, ஆயுதம் ஏந்திய போலீசார் கடைகளின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையிலேயே சோதனையில் ஈடுபட்டதால் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரவில்லை. கதவுகள் மூடப்பட்டு சோதனை நடத்தினர். அங்குள்ள நகைகள், வர்த்தக விவரங்களை சேகரித்தனர். அது தொடர்பான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்களூருவில் ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.