மே.வங்காளம்: வெளிநாட்டு தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு - பெண் பலி; தாக்குதல் நடத்திய போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


மே.வங்காளம்: வெளிநாட்டு தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு - பெண் பலி; தாக்குதல் நடத்திய போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x

மேற்குவங்காளத்தில் உள்ள வங்காளதேச தூதரகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவின் பார்க் சர்கஸ் பகுதியில் வங்காளதேச தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. நகரின் மிகவும் பரபரப்பான பகுதியில் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள், வாகன ஓட்டிகள் மீது போலீஸ்காரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூட்டை தொடந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது துடுப் லிப்சா என்ற போலீஸ்காரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடுமையான மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த லிப்சா இன்று பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story