குழந்தைகள் வளர்ப்பு பெண்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்


குழந்தைகள் வளர்ப்பு பெண்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்
x

குழந்தைகளை வளர்ப்பதும், வீட்டை நிர்வகிப்பதும் பெண்களின் பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

ஆண்களை விட சிறப்பு

டெல்லி அருகே உள்ள குருகிராம் பிரம்மகுமாரிகள் அமைப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் 'மதிப்பீடுகள் சார்ந்த சமூகத்தின் அடிப்படை, பெண்கள்' என்ற தேசிய மாநாட்டையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரம்மகுமாரிகள் அமைப்பின் சேவைகளை பாராட்டினார். மேலும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய சமூகத்தில் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகளை வடிவமைப்பதில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைத்தால், அவர்கள் ஆண்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களை விடவும் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

குடும்பத்தினரின் ஆதரவு

பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. எனினும் அவர்களில் பலரும் உயர்ந்த பதவிகளை அடைய முடிவதில்லை. தனியார் துறைகளின் நடுநிலை நிர்வாகத்தில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பெண்களின் பங்கேற்பு குறைந்துள்ளது.இதற்கு பெண்களின் குடும்ப பொறுப்புகளும் ஒரு காரணம் ஆகும். பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தை போல வீட்டிலும் பல்வேறு பொறுப்புகள் உள்ளன.ஆனால் குழந்தைகளை வளர்ப்பதும், வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பும் பெண்களுக்கானது என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். பெண்கள் தங்கள் தொழிலில் எந்த இடையூறும் இல்லாமல் உயர்ந்த நிலையை அடைவதற்கு குடும்பத்தினரின் ஆதரவும் இருக்க வேண்டும்.

பாகுபாடு காட்டுவதில்லை

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும் உருவாக்கும்.பொருளாதார முன்னேற்றம் மற்றும் செல்வ செழிப்பு நமக்கு பொருள் சார்ந்த மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் நிலையான அமைதியை வழங்காது. ஆன்மிக வாழ்க்கை தெய்வீக பேரின்பத்துக்கான கதவுகளைத் திறக்கிறது.தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல மனிதர்களாக மாற ஊக்குவிக்க வேண்டும். ஒரு தாய் தனது குழந்தைகளிடையே ஒருபோதும் பாகுபாடு காட்டுவதில்லை. குடும்பத்தில் முதல் ஆசிரியராகவும் அவரே இருக்கிறார்.

சமூகத்தின் இயல்பு மாறும்

அவர், தனது குழந்தையை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குழந்தைக்கு பல்வேறு மதிப்பீடுகளையும் புகுத்துகிறார்.எனவே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான மதிப்பீடுகளுடன் கல்வி கற்பிக்க வேண்டும். ஒரு தாயின் முயற்சியால் ஒரு குடும்பம், சிறந்த குடும்பமாக மாறும். அப்படி ஒவ்வொரு குடும்பமும் சிறந்த குடும்பமாக மாறினால், சமூகத்தின் இயல்பு தானாகவே மாறும். நமது சமூகம் மதிப்பீடுகள் அடிப்படையிலான சமூகமாக மாறும்.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.


Next Story