போராட்டத்தை நிறுத்த வேண்டாம், அமைதியான முறையில் போராடுங்கள் - பிரியங்கா காந்தி
போராட்டத்தை நிறுத்த வேண்டாம், அமைதியான முறையில் போராடுங்கள் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீகார், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பீகாரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மத்திய அரசின் புதிய திட்டமான 'அக்னிபத்' நாட்டிலுள்ள இளைஞர்களை கொல்லும், ராணுவத்தை அழித்து விடும். போராட்டத்தை நிறுத்த வேண்டாம், அமைதியான முறையில் போராடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"அக்னிபத் திட்டம் நாட்டிலுள்ள இளைஞர்களை கொல்லும், ராணுவத்தை அழித்து விடும். அரசாங்கத்தின் நோக்கத்தை பாருங்கள். அமைதியான, ஜனநாயக மற்றும் அகிம்சை வழிகளில் அதை வீழ்த்துங்கள். நாட்டிற்கு உண்மையுள்ள அரசாங்கத்தை கொண்டு வருவதும் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதுமே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.
போராட்டத்தை நிறுத்த வேண்டாம், அமைதியான முறையில் போராடுங்கள். இது உங்கள் நாடு, உங்கள் உரிமை, இதைப் பாதுகாப்பது உங்கள் கடமை. காங்கிரசின் ஒவ்வொரு தலைவரும், தொண்டர்களும் உங்களுடன் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.