பி.யூ.சி. மாணவியை கற்பழித்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்


பி.யூ.சி. மாணவியை கற்பழித்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்
x

தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பி.யூ.சி. மாணவி கற்பழித்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார்.

ராய்ச்சூர்:-

கல்லூரி மாணவி

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கோனவட்லா கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் லிங்கசுகுர் டவுனில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு விடுதியில் தனது அறையில் மாணவி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் லிங்கசுகுர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

கற்பழித்து கொலை

இதற்கிடையே, மாணவியின் குடும்பத்தினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக லிங்கசுகுர் போலீசில் புகார் அளித்தனர். மேலும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லிங்கசுகுர் போலீசார் தற்கொலை வழக்கை மாற்றி கற்பழித்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, கல்லூரி முதல்வராக இருக்கும் ரமேஷ் தான் அந்த விடுதியின் வார்டனாக இருந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மாணவியை அவர் மிரட்டியும் வந்துள்ளார்.

கல்லூரி முதல்வர் கைது

கல்லூரி முதல்வரின் அத்துமீறல் அதிகரித்ததால் அந்த மாணவி, பி.யூ.சி. 2-ம் ஆண்டை வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிவு செய்திருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் ரமேஷ், அந்த மாணவியை தனது அறைக்கு வரவழைத்து கற்பழித்ததாக தெரிகிறது. மேலும், இதுபற்றி வெளியே தெரியாமல் இருப்பதற்காக மாணவியை கொலை செய்து உடலை, அவரது அறைக்கு கொண்டு சென்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி அறிந்ததும் ரமேஷ் தலைமறைவானார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் ரமேசை நேற்று லிங்கசுகுர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story