மதுபான கடைகளுக்கு புவனேஷ்வரி தேவி புகைப்படம் விற்பனை
பெங்களூருவில் ராஜ்யோத்சவாவையொட்டி மதுபான கடைகளுக்கு புவனேஸ்வரி தேவி புகைப்படம் விற்பனை செய்து தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பெங்களூருவில் உள்ள மதுபான விடுதிகள், மதுபான கடைகளில் கன்னட தாய் புவனேஷ்வரிதேவியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தது. புவனேஷ்வரி தேவியின் கையில் இருந்த கொடியில் கன்னட கொடிக்கு பதிலாக வேறு கொடி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், மதுபான கடைகளில் புவனேஷ்வரி தேவியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அதே நேரத்தில் ராஜ்யோத்சவாயையொட்டி புவனேஷ்வரி தேவியின் புகைப்படங்களை ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை கலால் துறை அதிகாரிகள் விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னட வளர்ச்சி மற்றும் கலாசார துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். கன்னட தாய் புகைப்படங்களை மதுக்கடைகளுக்கு விற்ற கலால்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, கலால்துறை கமிஷனரிடமும் கன்னட வளர்ச்சி மற்றும் கலாசார துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.