பெங்களூருவில் மனிதாபிமானமற்ற சம்பவம்: தனியார் பஸ் மோதி இளம்பெண் சாவு; உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த அவலம்
பெங்களூருவில் சாலையோரம் ஸ்கூட்டரில் நின்ற இளம்பெண், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். உயிருக்கு போராடிய அவரை அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
தனியார் பஸ் மோதியது
பெங்களூரு நெலமங்களாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர், தனது ஸ்கூட்டரில் யஸ்வந்தபுரம் அருகே ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கழற்றிவிட்டு செல்போன் அழைப்பை எடுத்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று, சாலையோரம் ஸ்கூட்டரில் நின்றபடி செல்போனில் பேசி கொண்டிருந்த இளம்பெண் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டர் நொறுங்கியது.
செல்போனில் வீடியோ எடுத்தனர்
இதில் தவறி சாலையில் விழுந்த இளம்பெண்ணின் தலை மீது பஸ்சின் சக்கரம் ஏறி, இறங்கியது. விபத்து நடந்ததும் டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இளம்பெண், ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஆனால், அந்தப்பகுதியில் இருந்த யாரும் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை.
மாறாக அவர்கள் தங்களின் செல்போனில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை வீடியோ எடுத்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இளம்பெண் சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக இறந்துவிட்டார். சரியான நேரத்திற்கு அவரை கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளம்பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றாமல் செல்போனில் வீடியோ எடுத்த மனிதாபிமானமற்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் பலியான இளம்பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இந்த விபத்து குறித்து யஸ்வந்தபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.