நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கு: அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா


நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கு: அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா
x

மஹுவா மொய்த்ரா வரும் மக்களவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது.

இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்பேரில் மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் ரீட் மனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து மஹுவா மொய்த்ரா மீதான புகார் குறித்து, சி.பி.ஐ. நடத்திய ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் அடிப்படையில், ஊழல் தடுப்பு குறைதீர்ப்பு மன்றமான லோக்பால், மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர். மஹுவா மொய்த்ராவுக்கு வரும் மக்களவை தேர்தலில் மேற்கு வாங்காள மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைதொடர்ந்து, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானிக்கும் அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மஹுவா மொய்தரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானி இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மஹுவா மொய்த்ரா நேரில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் கிருஷ்ணா நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறி அமலாக்கத்துறையின் சம்மனுக்கு நேரில் ஆஜராக மஹுவா மொய்த்ரா மறுத்துள்ளார்.


Next Story