கலபுரகி, பீதர் மாவட்டங்களில் குடிநீர் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3,000 கோடி நிதி - கல்யாண-கர்நாடக தின விழாவில் எடியூரப்பா அறிவிப்பு


கலபுரகி, பீதர் மாவட்டங்களில் குடிநீர் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3,000 கோடி நிதி - கல்யாண-கர்நாடக தின விழாவில் எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2020 11:15 PM GMT (Updated: 17 Sep 2020 9:47 PM GMT)

கலபுரகி, பீதர் மாவட்டங்களில் குடிநீர் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கல்யாண-கர்நாடக (ஐதராபாத்-கர்நாடக) தின விழா கலபுரகியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்த சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதில் இந்த பகுதியும் ஒன்று. ஐதராபாத் நிஜாம்களின் பிடியில் இருந்த இந்த பகுதியை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் தியாகம் செய்தவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.


ஐதராபாத்-கர்நாடக என்று இருந்த இந்த பகுதிக்கு கடந்த ஆண்டு இதே நாளில் கல்யாண-கர்நாடக என்ற பெயரிட்டேன். இதன் மூலம் இந்த பகுதி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றினேன். மண்டல ஏற்றத்தாழ்வை சரிசெய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். கல்யாண-கர்நாடக வளர்ச்சி மற்றும் கல்யாண கர்நாடக மனிதவளம், விவசாயம் மற்றும் கலாசார அமைப்புகள் குறித்த இலக்கை அடைவதில் வெற்றி அடைந்துள்ளோம்.

இந்த கல்யாண-கர்நாடக பகுதி நாட்டின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்று. தொடர் வறட்சி காரணமாக இந்த பகுதி வளர்ச்சி பெறவில்லை. நஞ்சுண்டப்பா குழு அறிக்கையின்படி, மாநிலத்தில் 39 தாலுகாக்கள் வறட்சி பகுதியாக உள்ளது. இதில் 21 தாலுகாக்கள் இந்த கல்யாண-கர்நாடக பகுதியில் அமைந்துள்ளன. இந்த கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது தான் எங்கள் அரசின் நோக்கம்.

இந்த கல்யாண-கர்நாடக பகுதியில் உள்ள பீதர், கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், கொப்பல் மற்றும் பல்லாரி ஆகிய மாவட்டங்கள் ஆகியவை பின்தங்கிய மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். கலபுரகி மற்றும் பீதரில் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. இது இந்த பகுதியின் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும். யாதகிரியில் 1,510 ஏக்கர் பரப்பளவில் மொத்த மருந்து பூங்கா அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,446 கோடி. இதில் மத்திய அரசு ரூ.1,000 கோடி வழங்குகிறது.

கல்யாண-கர்நாடக பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படிக்க பெங்களூருவில் இடம் ஒதுக்கி தங்கும் கட்டிடம் கட்டி தரப்படும். அரசு ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை கிளையை கலபுரகியில் 300 படுக்கைகளுடன்அமைக்கப் படுகிறது. ரூ.150 கோடி செலவில் 7.15 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இது இந்த பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். கலபுரகி, பீதர் மாவட்டங்களில் குடிநீர் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்ட பணிகளுக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும்.

ராய்ச்சூரில் 1,200 மெகாவாட் நீர்மீன் உற்பத்தி திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரெயில்வே கோட்ட அலுவலகம் அமைப்பது குறித்து அத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார். இந்த விழாவில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story