அரசு முறை பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை


அரசு முறை பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 30 March 2022 9:33 PM GMT (Updated: 30 March 2022 9:33 PM GMT)

மத்திய மந்திரி அமித்ஷா இன்று(வியாழக்கிழமை) அரசு முறை பயணமாக கர்நாடகம் வருகிறார். அவர் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பெங்களூரு: மத்திய மந்திரி அமித்ஷா இன்று(வியாழக்கிழமை) அரசு முறை பயணமாக கர்நாடகம் வருகிறார். அவர் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சிவக்குமார சுவாமி பிறந்தநாள்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரு நாள் பயணமாக கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். இன்று இரவு பெங்களூருவில் தங்கும் அவர், நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெறும் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் 115-வது பிறந்தநாள் குரு வந்தனா விழாவில் கலந்து கொள்கிறார்.

அந்த விழாவை முடித்து கொண்டு மதியம் 2 மணிக்கு அதே மாவட்டத்தில் முத்தேனஹள்ளியில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிட கட்டுமான பணிகளுக்கு நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். 

யசஸ்வினி மருத்துவ காப்பீடு

அதன்பிறகு அவர் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அவர் கர்நாடக அரசு அறிவித்துள்ள பால்வள கூட்டுறவு வங்கியின் முத்திரையை வெளியிடுகிறார். அத்துடன் யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பால்வள கூட்டுறவு வங்கிக்கு கர்நாடக அரசு ரூ.100 கோடி வழங்குகிறது. அத்துடன் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ரூ.260 கோடி வழங்குகின்றன.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத நல்லிணக்கம்

கர்நாடகத்தில் இதுவரை சட்டம்-ஒழுங்கு சீர்குலையை வாய்ப்பு வழங்கவில்லை. அமைதியை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் நாட்களிலும் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்வோம். கர்நாடகத்தில் கலவர சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

மக்கள் ஒவ்வொருவரும் நிம்மதியாக உள்ளனர். இந்த நிம்மதியை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கிறது. முற்போக்கு சிந்தனையாளர்கள், கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் மற்றும் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று கோரி எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதை கவனித்து, உண்மை நிலையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார நிலை

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் பால்வள கூட்டுறவு வங்கியை தொடங்குகிறோம். இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் கிடைக்கும். கர்நாடகத்தில் 26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். 14 ஆயிரத்து 900 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. 15 பால் கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த பால்வள கூட்டுறவு வங்கி உதவும்.

விவசாயிகளுக்காக யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துகிறோம். உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா, 1-ந் தேதி (நாளை) கர்நாடகம் வருகிறார். அவர் கூட்டுறவுத்துறை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பால்வள வங்கி முத்திரையை அவர் வெளியிடுகிறார். மேலும் அன்று மாலையில் நடைபெறும் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் வருகையின்போது கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அமித்ஷாவின் வருகையையொட்டி தலைநகர் பெங்களூரு, துமகூரு ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Next Story