குப்பை மேடாகும் சுற்றுலா நகரம் தெளிவில்லாத திட்ட அறிக்கையால் திணறும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்


குப்பை மேடாகும் சுற்றுலா நகரம் தெளிவில்லாத திட்ட அறிக்கையால் திணறும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2020 11:50 PM GMT (Updated: 15 Feb 2020 11:50 PM GMT)

நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை (பொலிவுறு நகரம்) மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் இடம்பெற பல்வேறு போட்டிகளும் வைக்கப்பட்டன.

அதில் பங்குபெற்று திட்டத்தை பெறுவதே பெரிய சாதனையாக இருந்தது. 2 முறை முயற்சி செய்தும் புதுவை அரசுக்கு தோல்வியே மிஞ்சியது. 3-வது முறையாக கடுமையான போராட்டத்துக்குப் பின்பே வெற்றியை ருசித்தது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற புதுச்சேரியையும் மத்திய அரசு தேர்வு செய்தது. இதுவே அப்போது பெரிய சாதனையாக பேசப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் ரூ.1,850 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது புதுவை பட்ஜெட் தொகையில் 3-ல் 1 பங்கு ஆகும்.

மத்திய அரசு நிதி ரூ.500 கோடி, புதுவை அரசு நிதி ரூ.500 கோடி, பிரெஞ்சு அரசு ரூ.500 கோடி, வெளிக்கடனாக ரூ.350 கோடி பெற்று திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. புதுவை புல்வார்டு பகுதி மற்றும் நகரப்பகுதியில் உள்ள சில தொகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

குறிப்பாக 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம், குடிநீர் வழங்குவது, நகரப்பகுதியில் உள்ள குடிசைகளை கல்வீடுகளாக மாற்றுவது, பெரிய வாய்க்காலை மேம்படுத்துவது, நவீன கழிப்பறைகள் அமைப்பது, சைக்கிள் சவாரிக்கு தனி வழிகளை உருவாக்குவது போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டங்களை தயாரிக்க சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கடந்த 3 ஆண்டுகளாக கேட்கவில்லை. மத்திய அரசு ரூ.100 கோடி, மாநில அரசு ரூ.60 கோடி ஒதுக்கிய நிலையில் அதில் சிறுதொகையைக்கூட திட்டத்துக்காக செலவிடவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை ரூ.3 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் புதுவையில் மட்டும் இந்த அவல நிலைக்கு காரணம் என்ன?

இதற்கு முக்கிய காரணமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான அதிகாரிகள்தான். இவர்கள் வெளி மாநிலம் என்பதால் புதுவையை பற்றி எதையுமே அறியாமல் வந்துள்ள இவர்கள் மக்களைப்பற்றி சிந்திக்காமல், என்ன தேவை என்று அறிந்து கொள்ளாமல் திட்டமிடுகின்றனர்.

புதுவை நகர ரோட்டில் இறங்கி பார்க்காமல் நகர வரைபடத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை தீட்டுகின்றனர். கள ஆய்வு செய்யாமல் தீட்டப்படும் எந்த திட்டமும் வெற்றி பெறாது. அதாவது நம்மூரில் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போன்ற நிலைதான் அவர்களது திட்டமும்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் முதலில் ஒயிட் டவுன் பகுதியில் வாகன போக்குவரத்தை தடை செய்து தனியார் பங்களிப்புடன் சைக்கிள் சவாரியை தொடங்குவதுதான் அவர்களது திட்டம்.

அதுமட்டுமின்றி நவீன கழிப்பிடம் கட்டும் திட்டம் 2-வதாக உள்ளது. இந்த கழிப்பிடம் கட்டுவதில் அதிக அக்கறை எடுத்து செயல்படுகின்றனர். அதற்கும் முழுமையான திட்டம் தயாரிக்கப்படவில்லை.

ஏழை மக்களின் குடிசை வீடுகளை கல்வீடுகளாக கட்டித்தருவது, அடுக்குமாடி வீடு கட்டுவது, தடையற்ற மின்சாரம், குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதிலும் இதுவரை அக்கறை காட்டவில்லை. எதையெடுத்தாலும் டெண்டர் விடப்பட்டுள்ளது என்று காலத்தை கடத்துகிறார்களே தவிர உருப்படியாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

கவர்னர், முதல்-அமைச்சர் மோதலை தங்களுக்கு சாதகமாக சில அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்வதாக மக்கள் பிரதிநிதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Next Story