ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்க கவர்னர் அனுமதி


ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்க கவர்னர் அனுமதி
x
தினத்தந்தி 19 Sep 2020 11:18 PM GMT (Updated: 19 Sep 2020 11:18 PM GMT)

ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை விற்க கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்து உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலம் சுமார் 60 ஏக்கர் புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்று ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தற்போது ரோடியர் மில் மூடப்பட்டுள்ளது. எனவே பட்டானூரில் உள்ள நிலத்தை விற்பது தொடர்பான பிரச்சினையும் மத்திய அரசு வரை சென்றது. இதையொட்டி ரோடியர் மில் மூடப்படுவதாக அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அங்கு வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் ரோடியர் மில் மூடப்பட்டுள்ள சூழ் நிலையில் தங்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்க புதுவை அரசு முடிவு செய்தது. அதை தனியாருக்கு விற்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வந்தன.

இத்தகைய சூழ்நிலையில் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு விற்பனை செய்ய கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்து ஒப்புதல் கொடுத்துள்ளார். மேலும் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்கும் கோப்புக்கும் கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார்.

Next Story