மலைக்க வைத்த நாணய சேமிப்பு


மலைக்க வைத்த நாணய சேமிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2018 11:35 AM GMT (Updated: 12 Oct 2018 11:35 AM GMT)

ஒரு மனிதரால் எவ்வளவு நாணயங்களைச் சேமித்து விடமுடியும்? ஜெர்மனியில் சேர்ந்த ஒருவரின் நாணய சேமிப்பு ஆர்வம் மலைக்க வைக்கிறது.

 அந்த நபர் வசம் 12 லட்சம் நாணயங்கள் இருந்திருக்கிறது. அவற்றின் எடை 2,250 கிலோ. டிரக் டிரைவராக இருந்த அந்த நபர், 30 ஆண்டுகளாக தினமும் ஒன்றிரண்டு பென்னிக் நாணயங்களைச் சேமித்து வந்திருக்கிறார். அவர் இறந்த பிறகு தான் இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. 

மலைபோல் குவிந்துள்ள அந்த நாணயங்களை வங்கியில் கொடுத்து பணமாகப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெர்மனி மத்திய வங்கி, பழைய நாணயங்களை வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டது. இதையடுத்து நாணயங்கள் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் பல நாணயங்கள் இப்போது புழக்கத்தில் இல்லை. 

மேலும் சாதாரணமாக நாணயங்களை எண்ணுவதற்கு வங்கியில் கருவிகள் இருக்கின்றன. ஆனால் இந்த நாணயங்கள் துருப்பிடித்திருப்பதால் கருவிகளில் போட முடியவில்லை. அதனால் நாணயங்களைக் கைகளால் எண்ணுவதற்கு வங்கியில் பணிபுரியும் வுல்ப்காங் கெமெரிட் என்பவரை நியமித்தது வங்கி. கடந்த 6 மாதங்களாக நாணயங்களை எண்ணுவது மட்டுமே இவரது வேலை.

“நாணயங்களைத் தினமும் எண்ணி, பைகளில் நிரப்பி, எழுதி வைப்பதுதான் என்னுடைய வேலை. நாணயங்களை எண்ணுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததால், இந்த வேலை சலிப்பைத் தரவில்லை. 6 மாதங்களில் வேலை முடிந்துவிட்டது. சுமார் இந்திய மதிப்பில் 6 லட்சம் ரூபாய் அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்திருக்கிறோம். தனிப்பட்ட ஒரு மனிதரிடம் இவ்வளவு நாணயங்கள் இருந்தது ஆச்சரியமானது’’ என்கிறார் வுல்ப்காங்.

Next Story