உயர் கல்வியில் பயிற்று மொழியாகுமா தமிழ்மொழி?


உயர் கல்வியில் பயிற்று மொழியாகுமா தமிழ்மொழி?
x
தினத்தந்தி 13 Oct 2018 5:37 AM GMT (Updated: 13 Oct 2018 5:37 AM GMT)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லிச் சென்றவர் கணியன் பூங்குன்றனார்.

உலகம் முழுவதையும் அரவணைக்கும் விரிந்த உள்ளம் தமிழனுக்கு என்றும் உண்டு என்பதற்கு அந்த கவிஞனின் கூற்றே சரியான சான்று. உலகையே தன்னுடையதாக உணர்ந்து பழகிய தமிழன், தான் பிறந்த மண்ணின் மொழியாகிய தமிழை மறப்பது ஏன் என புரியவில்லை.

“‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே” என்பது பாரதியின் பாட்டு. தாயினும் சிறந்தது தாய் மொழி. இப் பூவுலகில் பிறந்து அறிவறிந்தது தொட்டு அன்னையால் தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டப்பட்டது தாய்மொழி. உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்படுவதாகவும் கால நடையில் பல மொழிகள் வழக்கழிந்து போவதாகவும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆறாயிரம் மொழிகளும் ஆறு மொழிகளே உயர் தனி செம்மொழிகள் என்று போற்றப்படுகின்றன. லத்தின், கிரேக்கம், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம் , தமிழ் ஆகியவையே அந்த உயர்ந்த பெருமைக்குரியவை. இப்போது லத்தின் பேச்சு வழக்கில் இல்லை. கிரேக்க மொழி அழிந்து மீண்டும் மறு உயிர்ப்பு பெற்றிருக்கிறது. ஹீப்ரு மொழியிலிருந்து பிறந்த ‘இவ்ரித்’ மொழியையே இன்று இஸ்ரேலியர்கள் பேசுகின்றனர். சமஸ்கிருதம் தெய்வ மொழியாகி மனிதர்கள் பேச முடியாத மொழியாகி விட்டது. சீனமும், தமிழும் மட்டும் இடையறாமல் இன்று வரை மக்கள் மனதில் வாழுகிறது. இன்றைய தமிழனுக்கு தமிழ் பேசுவது அவமானமாகப்பட்டது. தமிழில் படிப்பது அவமானமாக தோன்றியது. பின்பு தமிழனாக இருப்பதே அவமானமாக மாறிவிட்டது. மொழியின்றி இனமில்லை. இன உணர்வின்றி பண்பாட்டு வளர்ச்சிக்கு வேறு வழியே இல்லை. தாய்மொழி வழியாக கல்வியைப் பெறும் போது தான் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் பெருகும் என்பது காந்தியடிகளின் தத்துவம்.

விவேகானந்தர் முதல் பாரதி வரை தாய்மொழியை போற்றியவர்களே. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் தான் அறிவியல் கண்டுபிடிப்பு அதிகம். அதற்கு காரணம் அவரவர் தாய்மொழியில் பெறும் கல்வியே. மருத்துவம் பொறியியல் சட்டம் போன்றவற்றை கற்பிக்க நம் தமிழால் முடியாது என்ற மனப்பான்மையே இன்றைய தமிழர்களிடம் உள்ளது. ஒரு பூ பூத்து, உதிர்வது வரை உள்ள ஏழு நிலைகளை அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்று பகுத்து பதங்களை தந்தது நம் தமிழ்மொழி. மலர்வது மலர், முற்றும் மலர்ந்து விரிந்தால் அலர், வாடத் தொடங்கினால் வீ, வாடி உதிர்ந்தால் செம்மல் என்று பூவுக்கு தமிழில் அர்த்தம் தந்தது நம் தமிழ். ‘தாய்மொழியே ஒவ்வொரு மனிதனின் மனம் பேசும் மொழி’ என்றார் கோல்ரிஜ். ‘என்னுடைய வாழ்க்கையில் எதற்காகவாவது கவலைப்பட வேண்டும் என்றால் உயர்ந்த தமிழ் மொழியியை கற்க முடியாமல் போனதற்குதான்’ என்றார் காந்தியடிகள்.

தமிழகக் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ் தான் பயிற்று மொழியாக அமைய வேண்டும். இன்று சில கல்லூரிகளே தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பாடம் கற்பித்து வருகின்றன. படிப்படியாக எல்லாக் கல்லூரிகளிலும் தாய்மொழி வாயிலாகவே பட்டப் படிப்பு முழுவதையும் கற்பிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.பாடங்களைப் பிற மொழிகளில் பயில்வதைவிடத் தாய்மொழியில் பயில்வது எளிமையானது. ஆங்கிலத்தை போன்றே தமிழிலும் பாடங்கள் அனைத்தையும் எளிதாகப் பயிற்றுவிக்க முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் முதல் பகுதியில் தமிழ் மொழிப் பாடமும், இரண்டாம் பகுதியில் ஆங்கிலமும், மூன்றாம் பகுதியில் விருப்பப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பப் பாடங்களை எம் மொழியில் சொல்லித் தருகிறார்களோ, அம்மொழியே பயிற்றுமொழி எனப்படும். தமிழகக் கல்லூரிகளிலும், கல்வி மொழிகளிலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இடம் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆங்கிலம் விருப்பப் பாடமாக இடம் பெற்றுள்ளது.

தாய் மொழிக் கல்வியின் தேவையைப்பற்றி தேசத் தந்தை காந்தியடிகளே வற்புறுத்தி வந்தார். ‘ஆங்கிலக் கல்வி காரணமாக நாம் நமது ஆண்மையை இழந்து விட்டோம். நமது அறிவும் குன்றிவிட்டது’ எனக் காந்தியடிகள் எடுத்துக் கூறினார். தாய் மொழி இல்லாத கல்வி முறையை வன்மையாகக் கண்டித்தார்.எவ்வளவு விரைவில் கல்லூரிகளில் தாய்மொழி பயிற்று மொழியாக ஆக்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் நாடு முன்னேறும்’ என முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.மாணவர்களின் சிந்தனையும், கற்பனை எண்ணங்களும் தாய்மொழியில் தான் உருவாகித் தோன்றி வளருகின்றன. எனவே, சிந்தனை வளர்ச்சிக்குத் தேவை தாய்மொழி வழிக் கல்வி. புதிய புதிய கருத்துகள் இளைஞர் உள்ளங்களில் தோன்ற வேண்டுமானால், இக்கல்வியே மிகவும் இன்றியமையாதது.

ஆங்கிலம் என்பது இங்கிலாந்து நாட்டின் மொழி. அம்மொழியில் கற்பதால் மட்டுமே அறிவு வளரும் என்பது மடமை. உலகில் கல்வி மிக விரைவாக முன்னேறி வருகிறது. பலப் பல நாடுகள் தத்தம் தாய்மொழி வாயிலாகவே விஞ்ஞானம் போன்ற எல்லாப் பாடங்களையும் பயின்று அறிவு பெற்று வருகின்றன. தமிழர்களாகிய நாமும் நமது தாய்மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்டு பயின்று, அறிவு நலம் பெற வேண்டும்.உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழி ஆவதின் மூலம் தமிழ் உயர்வடைய முடியும். தமிழர்களின் வாழ்வும் உயரும். 

- மகா.பாலசுப்பிரமணியன், கல்வியாளர்.

Next Story