குங்குமப்பூவும் சிவப்பு நிறமும்


குங்குமப்பூவும் சிவப்பு நிறமும்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:20 AM GMT (Updated: 13 Oct 2018 11:20 AM GMT)

கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ இட்ட பாலை அருந்தினால் குழந்தை சிவப்பு நிறமாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை உலகில் பரவலாக உள்ளது. ஆனால் அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குங்குமப்பூ பாலை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குடிப்பதற்கும், சிவப்பாக குழந்தை பிறப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவரது தோலின் நிறம் என்பது, அக்குழந்தையின் பெற்றோர், அவர்களது மரபணுக்கள், மெலனின் உற்பத்தி ஆகியவற்றை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

மெலனின் அதிகமாக இருப்பவர்களின் தோல் நிறம் கருமையாகவும், மெலனின் குறைவாக இருக்கும் நபர்கள் சிவப்பாகவும் இருப்பார்கள்.

மேலும், சூரியனும் நாம் தோல் நிறத்தைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மெலனின் நம் தோலைப் பாதுகாக்கிறது.

பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் மக்களின் தோல் நிறம் கறுப்பாக இருக்கும். பூமத்திய ரேகைக்கு தொலைவில் இருக்கும் மக்கள் வெள்ளையாக இருப்பார்கள். உதாரணமாக, மேற்கத்திய நாட்டு மக்கள். இதற்கெல்லாம் மெலனின்தான் காரணம்.

ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றிய மனித இனம் ஆரம்பத்தில் மிகவும் கருமையான நிறத்திலேயே இருந்தது.

மக்கள் குடிபெயர்தல், கலப்பு கலாசார திருமணங்கள், மரபணு மாற்றங்கள் எல்லாம் சேர்ந்துதான் மனிதர்களின் தோல் நிறத்தை கருப்பில் இருந்து வெள்ளையாக மாற்றியது. இது குங்குமப்பூவால் ஏற்பட்ட மாற்றம் கிடையாது.

எந்த நிறமும் சிறந்ததோ, குறைந்ததோ கிடையாது என்றபோதும், நிறத்தை அடிப்படையாக வைத்து மனிதர்களைப் பாகுபடுத்துவது அன்று முதல் இன்றுவரை தொடர்கதையாக நீள்கிறது. 

Next Story