சிறப்புக் கட்டுரைகள்

எழுதுவோம்... எழுவோம்! + "||" + Write ...Rise!

எழுதுவோம்... எழுவோம்!

எழுதுவோம்... எழுவோம்!
அசோகரின் சரித்திரத்தை அவரது கல்வெட்டுகள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம். சுமார் 2 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன் வடிக்கப்பட்ட அவரது எழுத்துகள் மகாதி மொழியில் அமைந்திருக்கின்றன. அதைப் படித்து அறிந்தவர், ஜேம்ஸ் பிளின்செப் என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர்.
கிரேக்கர்கள் காசுகளில் பொறித்திருந்த எழுத்துகளின் அடிப்படையில்தான் ரோமாபுரியினர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் காயல்பட்டினம், கொற்கை போன்ற இடங்களுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

உலகையே புரட்டிப் போட்டவை, சிலரால் எழுதப்பட்ட சிறந்த நூல்களே. ‘பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா’ (Principia Mathematica) என்ற சர் ஐசக் நியூட்டனின் நூல், ‘வான்கோள்களின் சுழற்சியில்’ (On the revolution of celestial spheres) என்ற நிக்கோலஸ் கோபர்நிக்கசின் நூல், ‘இயற்கைத் தேர்வின் வாயிலாக உயிரினங்களின் தோற்றம்’ (The origin of species by means of natural selection) என்ற சார்லஸ் டார்வினின் நூல் ஆகியவை இன்றும் அறிவியலை வழிநடத்திச் செல்கின்றன. அறிவியல் அறிஞர்கள் சிலர் அறிவியல் விதிகளைக் கண்டுபிடித்திருந்தும், நூல்கள் எழுதாமல் போனதால் அவர்களுக்கு அந்தப் பெருமை கிடைக்காமல் போனது.

எழுத்துகளே மனிதகுலத்தின் சிந்தனையை மாற்றி அமைத்தன. உலகில் சமத்துவம் மலர்ந்ததற்கும், கொத்தடிமைத்தனம் அகன்றதற்கும், அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட்டதற்கும் கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘டாஸ் கேபிடல்’ (Das Capital), ரூசோ எழுதிய ‘அரசியல் உரிமையின் கொள்கைகள்’ (Principles of political right) போன்ற நூல்கள் காரணமாயின. லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ (War and peace) என்ற நூல் மகாத்மா காந்தியைக் கவர்ந்தது. காந்தியின் ‘சத்தியசோதனை’, மார்ட்டின் லூதர் கிங் என்ற புரட்சியாளரைக் கவர்ந்ததாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

ரோமாபுரியின் அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை எழுதிப் பாதுகாத்தார்கள். எனவேதான் அவற்றை நாம் இன்றும் புரிந்துகொள்ள முடிகிறது. யூக்ளிட் என்பவர் எழுதிய ‘கூறுகள்’ (Elements) என்னும் நூல் இன்று நமக்கு படிக்கக் கிடைத்திருக்கிறது. இது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன், அலெக்சாண்ட்ரியா என்ற ஊரில் எழுதப்பட்டது. அதே காலத்தில் நமது நாட்டுச் சிந்தனையாளர்கள் எழுதியதாகக் கருதப்படும் பல நூல்கள் பாதுகாக்கப்படவில்லை. எனவே அவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துபோயின.

எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கு மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நம்மை நிலைநாட்டவும் எழுதும் திறன் தேவைப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பம் எழுத ஒரு சிலருக்கே தெரிகிறது. அவர்களுக்கே அந்த வேலையும் கிடைக்கிறது. திறம்பட எழுதுவது வேலையின் ஓர் அங்கமாக இருக்கிறது.

நாம் மனதில் நினைத்ததை எழுதுவதற்கு மொழியறிவு அவசியம். தாய்மொழி என்பதால் தமிழில் எளிதில் எழுதிவிடலாம் என்று நினைத்துவிடக் கூடாது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட எல்லோரும் தமிழில் பிழையின்றி எழுதுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே தாய்மொழியாக இருந்தாலும், எழுதிப் பழகினால் மட்டுமே எழுத்து சிறக்கும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் பேனா பழக்கம் என்பேன் நான்.

வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பிரச்சினையாக இருக்கும் இன்று, எழுதத் தெரிந்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது. செய்தித்தாள், வாரப் பத்திரிகை, பதிப்பகம், பாடநூல்கள், சினிமா கதை வசனம், சினிமா பாடல், தொலைக்காட்சி செய்தி என்று எழுதுபவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் தேவை இருக்கிறது.

புகழ் வாய்ந்த சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களாகவும் இருந்திருந்திருக்கிறார்கள். எழுத்து அவர்களது சிந்தனையைத் தூண்டியிருக்க வேண்டும். சிந்தனையும் எழுத்தைக் கூர்மைப்படுத்தியிருக்க வேண்டும். நான் என்ன சிந்திக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள எழுதுகிறேன் என்கிறார், டானியல் ஜெ. பூர்ஸ்டின் என்ற வரலாற்று ஆசிரியர்.

சிலர் எழுத ஆசைப்படுகிறார்கள். அவர்கள் பல நூல்களையும் படித்து முடித்திருப்பார்கள், எழுதத் தயாராகியிருப்பார்கள். ஆனால் அவர்களால் எழுத முடிவதில்லை. ஏன் தெரியுமா? அவர்கள் ஒரு தாளை எடுத்து, பேனா முனையை அதில் பதித்து சில வரிகளைக்கூட எழுதவில்லை, அவ்வளவுதான். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் இன்றே ஒரு பக்கத்தை, அந்த முதல் பக்கத்தை எழுதிவிடுங்கள். இதைவிட ஒரு நல்ல நாள் உங்களுக்குக் கிடைக்காது.

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கமாவது எழுதுங்கள் என்று வேண்டிக்கொள்வேன். அப்படி எழுதியவற்றை ஆண்டின் இறுதியில் தொகுத்து ஒரு நூலாகக் கூட வெளியிடலாம். அந்த நூல் பெரிதாக விற்பனையாகிறதோ, இல்லையோ, நிச்சயமாக உங்களுக்கு நஷ்டமில்லை. அந்நூலை எழுத நீங்கள் பல நூல்களைப் படித்திருப்பீர்கள். தேடித் தேடி பல செய்திகளைச் சேகரித்திருப்பீர்கள், ஆழமாக சிந்தனை செய்திருப்பீர்கள். இதனால் உங்களது மொழியும், சிந்தனையும், ஞாபக சக்தியும் மெருகேறி இருக்கும். அது எல்லாம் உங்களுக்கு லாபம்தான்.

எழுதுவது என்பது வார்த்தைகளை வரிசைப்படுத்துவது அல்ல, அது சிந்தனையை வெளிப்படுத்துவது. பாரதியாரின் கவிதைகள் வெறும் வார்த்தைகளின் அணிவகுப்பு அல்ல, அவை ஆழ்ந்த சிந்தனைகளின் ஆற்றோட்டம். அந்த மாபெரும் கவிஞன் தனது எண்ணங்களை, சுதந்திர வேட்கையை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல வார்த்தைகளை வலிமையாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். சிறந்த நூல் உருவாக தெளிவான சிந்தனை வேண்டும். அதுவே அறிவு ஊற்றாக இருக்கும். சிந்தித்துப் பழகுங்கள். பலரின் கருத்துகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நல்ல எழுத்தாளர் ஆக மற்றவர்கள் சொன்னதையும் கேட்க வேண்டும், சொல்லாதவற்றையும் கேட்க வேண்டும்.

ஏதோ நாமும் எழுத வேண்டும் என்பதற்காக நீங்கள் எழுத வேண்டாம். ஒரு கருத்தை நிச்சயம் சொல்லியாக வேண்டும் என்றால் மட்டும் எழுதுங்கள். உங்கள் சிந்தனையில் கருப்பொருள் இருக்கும். அதைச் சொல்லவும் ஆசை இருக்கும். அப்போது அதை தைரியமாக எழுதிவிடுங்கள். பின்னர் அதை இரக்கமின்றித் தணிக்கை செய்யுங்கள்.

நீங்கள் மற்ற மாணவர்களை விடச் சிறந்து விளங்க வேண்டும் என்றால் இரண்டு காரியங்களை உடனடியாகச் செய்ய வேண்டும். ஒன்று, நிறையப் படிக்க வேண்டும். இரண்டு, நிறைய எழுத வேண்டும். கேள்விக்கான பதில்களைக்கூட எழுதிப் பார்க்க வேண்டும். அது தேர்வுக்குப் பின்னர் தரும் பரிசைக் கண்டு வியந்து போவீர்கள்.

வாசிப்பது மூச்சை உள்ளே இழுப்பது போன்றது, எழுதுவது மூச்சை வெளியே விடுவது போன்றது. வாழ்நாளில் நீங்கள் எழுதாமல் இருந்தால் வாழ்வில் தோல்வி அடைய ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிறார், ரே பிரேன்பர் என்ற அறிஞர்.

எழுத முனைப்புக் காட்டும்போது உங்களுக்கு ஓர் ‘எதிரி’ தோன்றக்கூடும். உங்கள் மீது உங்களுக்கு இருக்கும் சந்தேகம்தான் அந்த எதிரி. நாளை எழுதலாம் என்று ஒத்திப்போடுவது இன்னோர் எதிரி. அந்த எதிரிகளை வீழ்த்துவதற்கு உங்கள் கையில் ‘பேனா’ என்னும் ஆயுதம் இருக்கிறது. துப்பாக்கியைவிட சக்தி வாய்ந்தது இந்த பேனா. அதைக் கொண்டு சுடுங்கள். வெளியேறும் வார்த்தைகள், நீங்கள் மறைந்தபின்னரும் நிலைத்து நிற்கும், உங்கள் பெயர் சொல்லும்.

ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சேத்தன் பதக், அருந்ததி ராய் போன்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளராகவோ, பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன் போன்ற தமிழ் எழுத்தாளராகவோ உங்களால் உருவாக முடியும்.

அதற்கு... ‘முதல் பக்கத்தை’ இன்றே எழுதுங்கள்!

(வெல்லலாம்...) 

தொடர்புடைய செய்திகள்

1. ‘போர் உத்தி’ தரும் வெற்றி
ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் தலைமைப் பதவியை அடைவதுதான் பலருக்கும் லட்சியமாக இருக்கிறது.
2. மனித உறவுகளை மதிப்போம்!
இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
3. மனிதன் ஒரு மகத்தான அதிசயம்!
இந்தப் பூமியில் தோன்றிய உயிரினங்களில் இறுதியாக நாம் உருவாகியிருக்கிறோம். இன்னும் பல லட்சம் ஆண்டுகள் கழித்து மனிதர்களிடம் இருந்து வேறு எவரும் தோன்றுவார்களா எனத் தெரியவரும்.