நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : நிலக்கடலை சாகுபடி செய்யும் என்ஜினீயர்


நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : நிலக்கடலை சாகுபடி செய்யும் என்ஜினீயர்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:28 AM GMT (Updated: 14 Oct 2018 11:28 AM GMT)

படித்த இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்தான் இந்த மகத்தான மாற்றத்துக்கு அடித்தளமிட்டவர்.

அவரின் உணர்ச்சிமிகு உரைகளை யூ-டியூப்பில் பார்த்து அதன் விளைவாக இயற்கை விவசாயத்தில் கால் வைத்த இளைஞர்கள் ஏராளம். அவர்களில் திண்டுக்கல் கார்த்திகைவேலும் ஒருவர்.

என்ஜினீயரிங் படித்துவிட்டு கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த கார்த்திகைவேல் நம்மாழ்வாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தற்போது சொந்த கிராமத்திலேயே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள விருதலைப்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் கார்த்திகைவேலை காலை நேரத்தில் சந்தித்தோம். அவர், வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்துக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியெங்கும் இருபுறமும் சரளை கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது.

“இந்த பகுதி முழுவதும் இப்படி தாங்க இருக்கும். எல்லாமே சரள் பூமி. இங்ேக விவசாயம் பண்றது கொஞ்சம் சிரமம்தாங்க. எங்க ஊரில் ஆற்று பாசனமோ வாய்க்கால் பாசனமோ கிடையாது. கிணத்துல இருக்கிற கொஞ்சம் தண்ணீரையும் போர் தண்ணீரையும் வச்சுதான் விவசாயம் பண்றோம். சுத்துவட்டாரம் முழுவதும் மானாவாரி நிலமாக இருப்பதால் நெல், கரும்பு, வாழை மாதிரி நஞ்சை பயிர்களை பயிரிட முடியாது. இங்ேக நிலக்கடலையும், சிறுதானியங்களும்தான் அதிகம் விளையும். இதுதவிர கொஞ்சம் காய்கறி சாகுபடி பண்ணலாம்” என்று வழிநெடுக விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் சவால்களை சொன்னார்.

அவரது தோட்டத்தை அடைந்ததும் கார்த்திகைவேலின் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி நம்மை புன்னகையுடன் வரவேற்றார். இருவரும் அருகருகே இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி 8 ஏக்கரில் பகுதி நேரமாகவும் கார்த்திகைவேல் 10 ஏக்கரில் முழுநேரமாகவும் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

தோட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது கார்த்திகைவேல், “எனக்கு சொந்த ஊரு, அப்பா, அம்மா எல்லாத்தையும் விட்டுவிட்டு வெளியூர்ல போயி வேலை பார்க்க பிடிக்கலை. அப்போ யூ-டியூப்ல நம்மாழ்வார் வீடியோக்களை நிறைய பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த வீடியோக்களால் எனக்கு விவசாயத்தின் மேல் இருந்த ஆர்வம் அதிகமாயிக்கிட்டே வந்துச்சு. நான் சின்ன வயசுல இருந்தே அப்பா, அம்மாவுக்கு ஒத்தாசையா விவசாய வேலைகள பாத்துக்கிட்டு இருந்ததுனால விவசாயம் பண்றது எப்படினு எனக்கு நல்லாவே தெரியும். அதனால் தைரியமாக வேலைையவிட்டுவிட்டு விவசாயம் பண்ண சொந்த ஊருக்கே வந்துட்டேன். அதுமட்டுமில்லாமல் இயற்கை விவசாயம் தான் பண்ணனும்ங்கிறதிலும் உறுதியாக இருந்தேன்.

என்னோட மாமா எனக்கு முன்பே இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காரு. அவரு தான் என்னை ஈஷா விவசாய இயக்கம் நடத்துன பயிற்சி வகுப்புக்கு கூட்டிக்கிட்டு போனாரு. இயற்கை விவசாயம் சம்பந்தமாக யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து சில விஷயங்கள் தெரிஞ்சுகிட்டாலும் நேரடி களப் பயிற்சியில் அனுபவப்பூர்வமாக கத்துக்கிட்டதுதான் இப்ப வரைக்கும் கைக்கொடுக்குது” என்று தான் இயற்கை விவசாயத்துக்குள் நுழைந்த கதையை விரிவாக கூறினார்.

அவர் தனது நிலத்தில் நிலக்கடலையை பிரதான பயிராகவும் திணை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, தட்டைப்பயறு, பாசி பயறு உள்ளிட்டவற்றை ஊடுபயிராகவும் விளைவித்து வருகிறார்.

“முதலில் நிலத்தில் நாலு உழவு நல்லா ஓட்டிருவேன். 4-வது உழவு ஓட்டும்போது வேர் அழுகல் நோய் வராம தடுக்குறதுக்காக ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு தூவிவிட்டுருவேன். அதுக்கப்பறம் பார் இழுத்து நல்லா பருத்த நிலக்கடலைகளை ஏக்கருக்கு 40 கிலோங்குற அளவுல கொத்து போட்டு நட்டுருவேன். கடலை போடும் போது ஒரு விஷயத்தை முக்கியமா கவனிக்கணும், உடைஞ்ச கடலை, தோல் உரிஞ்ச கடலைகளை போட்டால் அவை முளைக்காது. அதனால, முன்னாடியே நல்ல கடலைகளா பார்த்து தேர்ந்தெடுத்துவைச்சுக்கணும்.

கடலை போட்டத்துக்கப்பறம் திணை, குதிரைவாலி, கேழ்வரகு இந்த மூணுல ஏதாவது ஒன்றை நிலம் முழுவதும் பரவலாக தூவிவிட்டுருவேன். அதோடு சேர்த்து நைட்ரஜன் பிக்சிங்காக தட்டைப்பயறு அல்லது பாசி பயறை ஏக்கருக்கு கால் கிலோங்குற அளவுல ஒவ்வொரு பாத்தியிேலயும் நெடுக்காக நட்டுருவேன். எல்லாத்தையும் நட்டு முடிச்சதும் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சணும்.

அடுத்து 22-வது நாள் முதல் களை எடுப்போம். அப்போது மண் புழு அதிகமாக வர வைக்கிறதுக்காக ஜீவாமிர்த கரைசலை தண்ணீயோட கலந்துவிட்டுருவேன். பூச்சி தாக்குதலை தடுக்குறதுக்காக ஏக்கருக்கு 10 பாட்டில் வேப்பங்கொட்டை கரைசலையும் ஸ்பிரே பண்ணிவிட்டுருவேன்.

40 - 45 நாள்ல 2-வது களை எடுக்கணும். அப்போது ஏக்கருக்கு 100 கிலோங்குற அளவுல கன ஜீவார்மிர்தம் போட்டுருவேன். இடையில பூச்சி தாக்குதல் வந்தால் பத்திலை கஷாயம் அல்லது அக்னி அஸ்திரம் பயன்படுத்துவேன். பூச்சி தாக்குதல் வருதோ இல்லையோ இவைகளை எல்லாம் முன்னாடியே ரெடி பண்ணி வைப்பது ரொம்ப நல்லது.

50-வது நாளில் செடியில் காய்ப்பு அதிகமாக வர்றதுக்காக 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் புளிச்ச மோரை கலந்து ஸ்பிரே பண்ணிருவேன். அதுக்கப்பறம் 55, 65, 75-வது நாட்களில் கடலை நல்லா திரட்சியா வர்றதுக்காக 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி மீன் அமிலத்தை கலந்து ஸ்பிரே பண்ணிருவேன். இதுக்கு இடையில் தண்ணீர் பாய்ச்சுறதை தவிர்த்து வயலில் பெரிசா எந்த வேலையும் இருக்காது.

70 - 100 நாட்களில் தட்டைப்பயறு, பாசிப்பயறு அறுவடை பண்ணிருவேன். 80 - 90 நாட்களில் சிறுதானியம் அறுவடை பண்ணிருவேன். 100 - 110 நாள்ல நிலக்கடலை அறுவடை ஆகிவிடும்” என்று பயிர் நடுவதில் இருந்து அறுவடை வரையிலான செயல்முறைகளை விவரித்தார், கார்த்திகைவேல்.

விவசாயி கிருஷ்ணமூர்த்தி “மார்கழி, ஆடி இந்த இரண்டு பட்டம் தான் நிலக்கடலை சாகுபடிக்கு உகந்த பட்டம்ங்க. மற்ற பட்டத்துல தக்காளி, கத்திரின்னு காய்கறிகளையும் சோளத்தையும் போட்டு எடுக்கலாம்” என்றார்.

மன திருப்தியை தாண்டி இந்த வறண்ட நிலத்தில் போதிய லாபம் கிடைக்கிறதா என்று கார்த்திகைவேலிடம் கேட்டோம். அதற்கு “வளமான மண்ணும், தேவைக்கு தண்ணீரும் இருந்தால் விவசாயம் மற்ற தொழில்களை அதிக லாபம் தரத்தான் செய்யும். வீடு, வாசல்னு நிறைய சொத்து சேர்க்கலாம். இந்த மாதிரி தண்ணீர் இல்லாத இடங்களில் கொஞ்சம் சிரமம் தான். ஆனால் எனக்கு இந்த இயற்கை விவசாயத்தில் எந்த நஷ்டமும் ஏற்பட்டதில்ைல.

குடும்பத்தில் உள்ள நாங்கள் அனைவரும் வயலில் இறங்கி வேலைபார்ப்பதால், செலவு ரொம்பவும் மிச்சமாகுது. களை பறிக்கவும், அறுவடைக்கும்தான் அதிகமாக செலவாகும். போன தடவை ஏக்கருக்கு 1,300 கிலோ நிலக்கடலை மகசூல் வந்துச்சு. கிலோ 65 ரூபாய்க்கு போச்சு. அதோட சேர்த்து கேழ்வரகு, பயறு வகைகள்ல இருந்தும் ஒரு வருமானம் வந்துச்சு. கூட்டி கழிச்சு பாத்தா எல்லா செலவும் போக குறைஞ்சது ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் லாபம் வந்திருக்கும். விவசாயத்தை தவிர 40 செம்மறி ஆடுகள் வளர்க்குறேன். நிலத்தில் பட்டிபோடும்போது நிலத்துக்கு தேவையான உரம் கிடைச்சிடும். அவை வளர்ந்த பிறகு நல்லவிலைக்கு வித்திடலாம். மனதில் நம்பிக்கை இருந்தால் விவசாயம் நல்லவழிகாட்டும்” என்றார், கார்த்திகைவேல். வறண்ட நிலத்திலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும், ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.

-தொடரும். 

Next Story