பந்தய மைதானத்தில் கலக்கிய ஆஸ்டின் மார்டின் வல்கைரி


பந்தய மைதானத்தில் கலக்கிய ஆஸ்டின் மார்டின் வல்கைரி
x
தினத்தந்தி 17 Oct 2018 5:48 AM GMT (Updated: 17 Oct 2018 5:48 AM GMT)

‘வல்கைரி’ காரின் செயல்திறன் இதை சூப்பர் கார் என்பதா? அல்லது ஹைபர் கார் என்பதா? என்று கூறும் அளவுக்கு இருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பெரும்பாலும் ஆஸ்டின் மார்டின் வகை கார்களை பார்த்திருப்பீர்கள். இந்த காரின் லேட்டஸ்ட் வரவுதான் ‘வல்கைரி’ எனும் மாடலாகும். இது சூப்பர் கார் அல்லது ஹைபர் கார் ஆகியவற்றுக்கான அனைத்து வரம்புகளையும் முறியடித்துள்ளது. அதாவது இந்தக் காரின் செயல்திறன் இதை சூப்பர் கார் என்பதா? அல்லது ஹைபர் கார் என்பதா? என்று கூறும் அளவுக்கு இருக்கிறது.

பார்முலா 1 பந்தய மைதானத்தில் கலக்கும் கார்களைப் போன்று இதன் வடிவமைப்பு கவர்ச்சியாக அமைந்துள்ளது. அத்துடன் பார்முலா 1 பந்தய அணியான ரெட் புல் அணியுடன் கூட்டு சேர்ந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் என்ஜின் திறன் 1,145 ஹெச்.பி. ஆகும். இதனால் இது ஹைபர் கார் பிரிவில் வராது. ஆனால் பந்தய களத்தில் இது சீறிப்பாய்ந்து செயல்பட்டது. பார்முலா 1 சர்க்கியூட் போட்டியின் கடைசி சுற்றில் இது எப் 1 காரை முந்தி விட்டதாக நிறுவனத்தின் தலைவர் ஆன்டி பால்மர் வியந்து கூறுகிறார்.

1,145 ஹெச்.பி. திறனில், இது சாத்தியமா? என்ற வியப்பு பந்தய வீரர்களுக்கு எழுந்தது. இதற்கு காரணம் இந்தக் கார் மற்றதை விட எடை குறைவாக இருந்தது தான். பார்முலா 1 கார்களின் வடிவமைப்பாளர் அட்ரியன் நிவே, ஏரோ டைனமிக் முறையில் இந்த காரை டிசைன் செய்துள்ளார். லின்ஸ் ரேஸருக்குப் போட்டியாக இதன் சேஸிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்முலா 1 ரேஸருக்கான என்ஜின் தயாரிக்கும் கோஸ்வொர்த் என்ஜின் உள்ளதும் முக்கியக் காரணமாகும்.

6.7 லிட்டர் என்ஜின் 11,600 ஆர்.பி.எம்., வி 12 மற்றும் எரிபொருள் மீட்சி சிஸ்டம் இருப்பது சக்தியை கூட்டுவதாக அமைந்துள்ளது. ஹைபிரிட் எரிபொருள் மீட்சி அமைப்பானது குரேஷியாவின் பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனமான ரிமாக் அளித்ததாகும். இந்நிறுவனம் தான் மஹிந்திராவின் சூப்பர் காருக்கு மின் மோட்டாரை அளிக்கிறது. அதேபோல இந்நிறுவனம்தான் பேட்டரிகள் சக்தியை சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் தருகிறது. இந்தக் காரில் கார்பன் பைபர் தொட்டி மிகவும் எடை குறைவாக இருப்பதும் காரின் எடையை 1000 கிலோவுக்கும் குறைவானதாக ஆக்கியுள்ளது. இதனால் காரின் திறன் மற்றும் அதன் எடை 1:1 என்ற அளவில் உள்ளது.

7 கியர்கள் கொண்ட இந்தக்காரை வடிவமைத்து ஒருங்கிணைத்தது பிரிட்டனைச் சேர்ந்த ரிகார்டோ நிறுவனமாகும். இந்நிறுவனம் ரேஸ் மாடல் கார்களுக்கான என்ஜினை வடிவமைப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டதாகும். மெக்லரென் காருக்கான என்ஜினை வடிவமைத்ததும் இந்நிறுவனம் தான்.

இந்தக் காரின் அடிப்படை அம்சங்கள் ஏரோ டைனமிக் உருவாக்கத்துக்கு துணையாக உள்ளது. காரில் அமர்ந்து மேற்கூரையான கண்ணாடி கதவை மூடிய வுடன் தேவையான குளிர் காற்றை அனுப்ப பின்பகுதியில் ‘டிப்யூசர்’ உள்ளது. காரில் அமர்ந்து பார்த்தால், நீளமான கட்டுமரத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலோங்கும்.

இதில் உள்ள ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்குகள் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் காரின் உயரம் 120 மி.மீ. முதல் 130 மி.மீ. வரை உள்ளது. பந்தய மைதானத்தில் இதை 20 மி.மீ. வரை குறைக்க முடிவது சாதக அம்சமாகும். இதனால் சாதாரண சாலைகளிலும் சொகுசாக இதில் பயணிக்க முடியும். இதில் மெதுவாகவும் செல்ல முடியும், பந்தய மைதானத்தில் சீறிப்பாய்ந்து செல்லவும் முடியும்.

ஆறு அடிக்கும் மேலான உயரம் உள்ளவர்களும் இதில் அமர்ந்து ஓட்ட முடியும், தலை இடிக்காது. இருவர் பயணிக்கும்போது சமயங்களில் தோள்பட்டை உரசும், ஏனெனில் இதன் அகலம் சற்று குறைவானதுதான். தலைப்பகுதியை பாதுகாக்கும் பேக் ரெஸ்ட் பகுதி மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த காரின் போஸ்டர் பலரையும் கவரும் விதமாக உள்ளது. உண்மையில் காரை நேரில் பார்த்தால் சொக்கித்தான் போவீர்கள். ஆனால் விலையைக் கேட்டு மயங்கி விழாமலிருந்தால் சரி. இதன் விலை ரூ.23 கோடி. இறக்குமதி வரி தனி. 100 சதவீதம் இறக்குமதி வரி போட்டால் அவ்வளவுதான், இந்தக் காரின் விலை ரூ. 46 கோடியைத் தொட்டுவிடும்.

Next Story