இறந்த கணவரின் உயிரணுவில் இரட்டை குழந்தைகள்


இறந்த கணவரின் உயிரணுவில் இரட்டை குழந்தைகள்
x
தினத்தந்தி 21 Oct 2018 5:30 AM GMT (Updated: 19 Oct 2018 3:21 AM GMT)

சுதாகரன் கவிஞர். 23 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதிய கவிதை பத்திரிகையில் பிரசுரமானது. அதை படித்த ஷில்னா இரண்டே வரிகளில், ‘உங்களுடைய கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது’ என்று எழுதி, அந்த கடிதத்தை சுதாகரனுக்கு அனுப்பி இருக்கிறார்.

றந்த கணவரின் பாதுகாக்கப்பட்ட உயிரணுவை பயன்படுத்தி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணியின் அபூர்வமான வாழ்வியல் சம்பவம் இது. அவர் பெயர் ஷில்னா. அவருடைய கணவர் சுதாகரன். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் காதலும், பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளை போல வித்தியாசமானதுதான்.

சுதாகரன் கவிஞர். 23 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதிய கவிதை பத்திரிகையில் பிரசுரமானது. அதை படித்த ஷில்னா இரண்டே வரிகளில், ‘உங்களுடைய கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது’ என்று எழுதி, அந்த கடிதத்தை சுதாகரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதற்கு சுதாகரனும் நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து 5 வருடமாக இருவருக்கு இடையேயும் கடித பரிமாற்றம் நடந்்திருக்கிறது. அதுவே நாளடைவில் நட்பாக மாறி காதலாக கனிந்திருக்கிறது. இரண்டு பேரும் நேரடியாக சந்திக்காமலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்கள்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு 11 வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள். அந்த காலகட்டத்தில் சுதாகரனுக்கு கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது. ஷில்னாவும் வங்கியில் பணியில் சேர்ந்து அதிகாரியானார். மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் விதி விபத்து ரூபத்தில் விளையாடிவிட்டது.

அதுபற்றி ஷில்னா சொல்கிறார்...!

‘‘என் கணவர் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன். அவர்கள் கஷ்டப்பட்டு என் கணவரை படிக்க வைத்தார்கள். அவர் திமிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அந்த ஊரில் ‘முதல் கெஜட்டட் ஆபீசர்’ என்ற அந்தஸ்தை பெற்றது என் கணவர்தான்’’ என்கிறார், ஷில்னா.

சுதாகரன்-ஷில்னா தம்பதியருக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தையின்மை சிகிச்சை பெறுவதற்காக கண்ணூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து சிகிச்சையை தொடர்ந்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவமுறைப்படியும், டாக்டர்களின் ஆலோசனைப்படியும் சுதாகரனின் உயிரணுவை எடுத்து சிகிச்சைக்காக சேமித்து வைத்திருக்கிறார்கள். அதனை பயன் படுத்தி சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இரண்டு முறை முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் தோல்வியே மிஞ்சியிருக்கிறது. எனினும் தாய்மையடைந்துவிட வேண்டும் என்பதில் ஷில்னா உறுதியோடு இருந்திருக்கிறார். அதற்கு நேர்மாறாக சுதாகரன் உயிரை விபத்து அபகரித்து கொண்டுவிட்டது. அந்த விஷயம் தெரியாமல் கணவருடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராகி இருந்திருக்கிறார்.

‘‘கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நாங்கள் இரண்டு பேரும் டாக்டரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தோம். அன்று காலையில் பல் கலைக்கழகத்திற்கு ஒரு வேலை விஷயமாக செல்லவேண்டியிருப்பதாக கூறினார். அங்கு சென்றுவிட்டு நேராக மருத்துவமனைக்கு வந்து விடுவதாக கூறிவிட்டு சென்றார். நானும் அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் நேரத்தை கணக்கிட்டு அங்கு செல்ல எங்கள் ஊரில் இருந்து ரெயில் ஏறினேன். ஏறியதுமே அவருக்கு செல்போன் மூலம் தகவல் சொல்ல முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது என் அப்பா என்னை தொடர்பு கொண்டு அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கிவிடுமாறு கூறினார். நான் காரணம் கேட்டதற்கு, ‘தனக்கு உடல்நிலை சரி இல்லை’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் பதற்றத்துடன் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கினேன். அங்கு என் சித்தப்பா காத்திருந்தார். அவர் என்னை வீட்டுக்கு திருப்பி அழைத்து சென்றுவிட்டார். வீட்டு வாசலில் என் அப்பா நின்று கொண்டிருந்தார்’’ என்கிறார்.

பல்கலைக்கழகத்துக்கு சென்ற சுதாகரன் விபத்தில் சிக்கி இறந்து போயிருக்கிறார். அந்த விஷயத்தை நேரடியாக சொன்னால் ஷில்னா கடும் மன வேதனைக்கு ஆளாகிவிடுவார் என்று உண்மையை சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள். ஷில்னாவுக்கு சந்தேகம் எழாதவாறு அவருடைய கவனத்தை திசை திருப்பியிருக்கிறார்கள்.

‘‘என் அப்பா, ‘எனக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு என்னை அழைத்து செல்’ என்று கூறி காரில் ஏற்றினார். செல்லும் வழியில் எனக்கு வாட்ஸ் ஆப்பில் நிறைய மெசேஜ்கள் வந்தன. அதில் ஒரு மேசேஜில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி இருக்கிறார் என்ற தகவல் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். மறுநாள்தான் எனக்கு நினைவு வந்தது’’ என்கிறார்.

அப்போதும் சுதாகரனை பற்றி எந்த தகவலையும் குடும்பத்தினர் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். அவரது உடல் வேலை பார்த்த கல்லூரியில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. முழு விவரம் தெரியாமல் ஷில்னா கணவரை பற்றி விசாரித்திருக்கிறார். அப்போதும் ஐ.சி.யூ.வில் இருப்பதாக சொல்லி சமாளித்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்து சுதாகரன் இறந்த தகவலை சொல்லியிருக் கிறார்கள். அதுவரை உடலை பாதுகாத்திருக் கிறார்கள்.

கணவரின் இறப்பு செய்தி கேட்டு ஷில்னா நிலைகுலைந்து போயிருக்கிறார். உடலை வீட்டுக்கு எடுத்து இறுதி சடங்கை நடத்தி இருக்கிறார்கள். கணவரின் எதிர்பாராத இழப்பில் இருந்து மீண்டு வர, கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஒரே ஆறுதல் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

‘‘என் விருப்பத்தை பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெற்றேன். என் கணவரின் மாமியாரின் சம்மதமும் தேவைப்பட்டது. அவரிடம் சொன்னேன். அவர் என்னை கட்டி அணைத்து அழுதார். என் முடிவுக்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தார். நான்கு முறை பரிசோதனை முயற்சி செய்யும் அளவிற்கு கணவரின் உயிரணுவை சேமித்து வைத்திருந்தோம். இரண்டு முறை முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டதால் கணவரின் உயிரணுவை நானே என் கருப்பையில் சுமக்கும் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினேன். அதற்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்கள். இவ்வளவு நாள் வேலை பார்த்தும் என்னால் அவ்வளவு பணம் சேர்த்துவைக்க முடியவில்லை. அவ்வப்போது சிகிச்சைக்காக பெருமளவு பணத்தை செல வழித்துவிட்டேன். ஆனாலும் என் பெற்றோர் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். டாக்டர் களிடம் என் முடிவை சொன்னேன்.

அவர்களோ, ‘நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாடகைத்தாய் ஆரோக்கியமாக இருப்பாரா? என்று சொல்லமுடியாது. நீங்களே மீண்டும் ஒருமுறை தாய்மையடைய முயற்சி செய்யலாமே’ என்றார்கள். உடனே நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால் சில சட்டச்சிக்கல்கள் இருந்தது. பொதுவாக ஒருவருடைய உயிரணுவை பயன் படுத்துவதற்கு அவருடைய அனு மதியை பெற வேண்டும். கணவர் உயிரோடு இல்லாததால் அது தொடர்பான சட்ட ஆலோசனைகளை மேற்கொள்ள தொடங்கினேன்.

அப்போது என் உறவினர்களில் சிலர், ‘நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய். உனக்கு வயதாகி விடவில்லை. இறந்து போன கணவரின் உயிரணுவை கொண்டு குழந்தை பெற்றால் அதனை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்பாகிவிடும். அது உனக்கு பாதகமாகவும் மாறிவிடக்கூடும். நீ தேவையில்லாமல் விஷப்பரீட்சையில் இறங்காதே’ என்றார்கள். நானோ என் கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தேன். அது சார்ந்த சட்டச்சிக்கலுக்கும் சுமுக தீர்வு ஏற்பட்டது. ‘கணவரின் பெற்றோருடைய சம்மதம் பெற்றால் போதும். அதுவே சட்டப்படி போதுமானது’ என்ற முடிவுக்கு வந்தார்கள் டாக்டர்கள். எனக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். கர்ப்பப்பை வலுவாக இருக்கிறதா? என்பதை பரிசோதித்துவிட்டு சிகிச்சையில் இறங்கினார்கள். என் சினை முட்டையையும், கணவரது உயிரணுவையும் சோதனைக் குழாய் மூலம் கருவாக்கி வளர்த்து, என் கருப்பையில் செலுத்தினார்கள். அந்த தருணத்தில் என் கணவர் என்னுள் உயிராகி விட்டார் என்று நினைத்தேன். இரண்டு வாரங்கள் கழித்து கரு வளர்ச்சி அடைகிறதா? என்பது பற்றிய முடிவு தெரியும் என்று சொன்னார்கள். பின்பு பரிசோதனை செய்தபோது கருவில் இரட்டை குழந்தைகள் வளர்வதாகக் கூறினார்கள்’’ என்று மனம் பூரிக்கிறார்.

ஷில்னா கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு இருக்கிறார். 34 வாரங்களில் சிசு நல்ல வளர்ச்சி நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கணவர் இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக அவருடைய நண்பரின் மனைவி இதே முறையில் குழந்தை பாக்கியம் பெற்றிருந்திருக்கிறார். அந்த நண்பர், சுதாகரனிடம் இரண்டு முறை சோதனைக்குழாய் குழந்தை முயற்சி தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி, ‘உங்களுக்கு மட்டும் அப்பாவாகும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே' என்று வருத்தப்பட்டிருக்கிறார். அப்போது சுதாகரன், ‘நீங்கள் எங்களுக்கு குழந்தை பிறக்காததை நினைத்து கவலைப்பட வேண்டாம். நிச்சயம் எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கும். அந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட வேண்டிய பெயரையும் நான் டைரியில் எழுதியும் வைத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதை நினைவு கூரும் ஷில்னா கணவர் சொன்னபடியே இரட்டை பெண் குழந்தைகளை பெற் றெடுத்துவிட்டேன் என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். ஷில்னாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. தன்னுடைய கணவரே மறு ஜென்மம் எடுத்திருப்பதாக நினைத்து ஷில்னா சந்தோஷமாக குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

Next Story