லாஜிக் நிறைந்த விளையாட்டு ‘மேஜிக்’


லாஜிக் நிறைந்த விளையாட்டு ‘மேஜிக்’
x
தினத்தந்தி 20 Oct 2018 9:16 AM GMT (Updated: 20 Oct 2018 9:16 AM GMT)

டிஜோ வர்கீஸ் தாமஸ், கோவையை சேர்ந்த மேஜிக் கலைஞர். இவரது மேஜிக் வித்தைகள் குழந்தைகளையும், டீன்-ஏஜ் வயதினரை வெகுவாக ஈர்க்கிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக மேஜிக் செய்துவரும் டிஜோ, சமீபத்தில் மேஜிக்கில் ஒரு உலக சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, கண்களை கட்டியப்படி 4½ மணி நேரம் மேஜிக் செய்து, புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். இவரது முயற்சியை பாராட்டி ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்’, ‘யூனிவெர்சல் ரெக்கார்ட் போரம்’, ‘வேல்ட் ரெக்கார்ட் ஆப் இந்தியா’ போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனை நிகழ்வை பற்றியும், மேஜிக் தகவல்கள் பற்றியும் விளக்கமாக தெரிந்துகொள்ள டிஜோவிடம் பேசினோம்.

‘‘கேரளா, என்னுடைய பூர்வீகம் என்றாலும், கோவையில்தான் வளர்ந்தேன். பள்ளி ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட மேஜிக் ஷோ என்னை வெகுவாக கவர்ந்ததால், அதை முறைப்படி கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். 10 வயதிலிருந்தே, மேஜிக் கலையை பயின்று வருவதால், என்னால் கண்களை கட்டிக்கொண்டும் மேஜிக் செய்யமுடிகிறது. அதை உணர்ந்ததும், கண்களை கட்டிக்கொண்டு மேஜிக் செய்ய ஆரம்பித்தேன். பல தடைகள், பல ஏமாற்றங்களை கடந்த பிறகுதான், கண்களை கட்டிக்கொண்டு 4½ மணிநேரம் மேஜிக் செய்யமுடிந்தது. ஆரம்பத்தில் கண்களை மூடிக்கொண்டு ஒரு மணிநேரம் மேஜிக் செய்து பார்த்தேன். அந்த முயற்சி வெற்றியில் முடிந்ததால், மேலும் பல மேஜிக் வித்தைகளை பயின்று, புதிய முயற்சியில் இறங்கினேன். திறந்த மேடையில் பொதுமக் களுக்கு முன்பாகவும், சாதனை அமைப்பினர் முன்பாகவும் கண்களை கட்டியபடி 4½ மணிநேரம் மேஜிக் செய்து காட்ட, வாழ்த்து களோடு, சாதனை சான்றிதழ்களும் குவிந்துவிட்டன’’ என்பவர், மேஜிக் கலையில் சில ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியிருப்பதோடு, பல ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பு களையும் முடித்திருக்கிறார். இதுமட்டுமின்றி, கண்களை கட்டிக்கொண்டு மேஜிக் செய்ததை போன்று 20-க்கும் அதிகமான சாதனை நிகழ்வுகளையும் நிகழ்த்தியிருக்கிறார்.

‘‘இன்றைய நவீன உலகில் மேஜிக் மீதான மோகம் குறைந்துவிட்டதாக, மக்கள் கருதுகிறார்கள். ஆனால் இன்றும், இந்தியாவில் மேஜிக் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முன்பை காட்டிலும் பல இடங்களில் மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியலில் ஆர்வமுடைய மாணவர்கள், மேஜிக் கலையை தனி படிப்பாக விரும்பி படிக்கிறார்கள். இதற்காக இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் பயணிக்கிறார்கள். சிலர் ஆன்லைன் தளங்களில் படித்து, ஆன்லைன் மூலமாகவே மேஜிக் சம்பந்தமான தேர்வுகளை எழுதுகிறார்கள். இளைய தலை முறையினரால், மேஜிக் கலை புதிய பரிமாணத்தில் பயணிக்கிறது. நம்பமுடியாத மேஜிக் கலைகளையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர்’’ என்பவர், தினமும் 4 மணிநேரம் மேஜிக் பயிற்சிகளை மேற்கொள்கிறார். வித்தைகள் அதிகமாக கற்றுக்கொண்டால், பயிற்சி நேரமும் அதிகமாகுமாம்.

‘‘மேஜிக் கலை என்பது, கடல் போன்றது. அதில் நீந்தி, கரைசேருவது என்பது முடியாத காரியம். சிலர் பாதி கடல் வரை நீந்துவார்கள். சிலர் கடலில் குதித்ததுமே மூழ்கிவிடுவார்கள். நான் இப்போதுதான் மெதுவாக நீந்த ஆரம்பித்திருக்கிறேன். நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் மேஜிக் கலைஞராக நீந்திக்கொண்டே இருப்பேன்’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைப்பெற்றார்.

Next Story