மனிதனின் அடுத்த குடியேற்றம் விண்வெளியில் அல்ல; நிலத்தடியில்தான்...!


மனிதனின் அடுத்த குடியேற்றம் விண்வெளியில் அல்ல; நிலத்தடியில்தான்...!
x
தினத்தந்தி 23 Oct 2018 10:02 AM GMT (Updated: 23 Oct 2018 10:22 AM GMT)

நிலவில் கால்பதித்து விட்டோம், செவ்வாயில் குடியேறும் திட்டம் தயார்? நாம், விரைவில் வேற்றுக் கிரகத்தில் குடியேறி விடுவோம் என்று நம்மில் பலரும் நம்பி இருக்கலாம்.

 ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை. அதற்கு நேர் மாறாக நாம் பின்னோக்கி பயணிக்கப் போகிறோம், அதாவது நம் மூதாதையர்கள் போல குகையிலும், பதுங்கு குழியிலும்தான் வாழப்போகிறோம் என்கிறார்கள் உலகளாவிய பருவமாற்ற ஆராய்ச்சி குழுவினர். அவர்கள் என்ன சொல்கிறார்கள், கொஞ்சம் கேட்போமா...

“நிலவில் கால் பதித்தது சாதனையாக இருக்கலாம். செவ்வாயில் ஒரு சிலருக்கான குடியிருப்புகளையும், வாழும் சூழலையும் உருவாக்கலாம். ஆனால் பூமியிலுள்ள அனைவரையும் வேற்றுக்கிரகத்திற்கு இடம் பெயர்க்க, இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உதவாது. பல நூறு ஆண்டுகள் காத்திருந்தாலும்கூட இப்போதைய விஞ்ஞானத்தால் அதை சாதிப்பது சுலபமல்ல” என்கிறார்கள் நிபுணர் குழுவினர்.

காடுகளை அழித்து நீண்டகாலம் வாழ முடியாது’ என்பதை வெப்ப உயர்வு நமக்கு காட்டியிருக்கிறது. இதுபற்றி இந்த உலகம் விரைவில் இன்னும் தீவிரமாக உணரும். எனவே இந்த பூமி காடுகளுக்கும், தாவரங்களுக்குமானது. மனிதன் வசிக்க வேண்டுமானால் அவற்றை அழித்து வாழ்வதைவிட அவற்றுடன் இணைந்து வாழ்வதே சிறந்தது என்பதை இயற்கை இப்போது நமக்கு உணர்த்தத் தொடங்கிவிட்டது.

கடல் நீர்மட்டம் உயர்கிறது, காற்று மாசடைகிறது, வெப்பம் உயர்ந்து வருகிறது. மனிதன் பூமியில் இருக்கலாமா, செவ்வாயில் குடியேறலாமா? என யோசிக்கலாம். ஆனால் வேற்றுக்கிரக குடியேற்றம் சாத்தியமில்லை, நிலத்தடி வீடுகள்தான் வருங்கால மனித வசிப்பிடம்” என அடித்துச் சொல்கிறார்கள் அவர்கள்.

அப்படியென்றால் நாம் மீண்டும் குகை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமா? இவ்வளவு மக்கள் வசிக்க எங்கே குகைகள் இருக்கின்றன? என்று நினைக்க வேண்டாம். நிலத்தடி குடியேற்றம்தான் எதிர்காலத்திற்கு ஏற்றது, பாதுகாப்பானது. போர்க்காலத்தில் எப்படி பதுங்கு குழிகளில் பதுங்கி போர்வீரர்களும், பிரபலங்களும் உயிர் காத்துக் கொள்கிறார்களோ, அப்படித்தான் இனி எதிர்காலத்தில் மனித குலமே தங்கள் உயிர்களை காத்துக் கொள்ள வேண்டுமாம்.

நிலத்தடியில் பங்களா கட்டிக் கொண்டு, மேல் மட்டத்தில் தாவரங்களை பயிரிட்டு, காடுகளை வளர்த்து வாழ்ந்தால் மனித குலங்கள் தொடர்ந்து இந்த பூமியில் ஜீவிக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாற்றங்கள் அதைத்தான் உணர்த்துகின்றன.

கோடிகளைக் கொட்டி செலவழித்து வேற்றுக்கிரகம் செல்ல பெரும்பணக்காரர்களால் மட்டுமே முடியும். ஏழைகளை அப்படி வேற்றுக்கிரகத்தில் குடியேற்றம் செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி போதாது. அதற்குமுன் மனித தொகை இன்னும் பல மடங்காக பெருகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே விண்வெளி குடியேற்றத்தைவிட சிறந்தது பூமியை வாழத் தயார்படுத்துவதே.

“நிலத்தில் பயன் படுத்தப்படாமல் பெரும்பகுதியை கடல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கடல் குடியிருப்புகளை அதிகரிக்கும் திட்டங்களில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கடல் குடியேற்றங்கள் அவ்வளவு எளிதானதல்ல. மிதக்கும் குடியிருப்புகளின் உத்தரவாதம் கேள்விக்குறியானதுதான். மேலும் உணவுக்காக நிலத்திற்கு வந்துதான் ஆக வேண்டும். தனி நபர்களால் எளிதில் கடல் குடியேற்றங்களை உருவாக்க முடியாது. இன்னும் பல சவால்களும் இருக்கின்றன” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மனிதனின் குகை வாழ்க்கை ஒன்றும் புதியதல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குகையில் வாழ்ந்துள்ளான். குகை ஓவியங்கள் அந்த வரலாற்றை சொல்கின்றன. எதிர்காலத்தில் நிலத்தடி குகைகளே குடியிருப்புகளாகும்.

அமெரிக்காவிலும், சீனாவின் பீஜிங் நகரிலும் அணுசக்தியால் பாதிக்காத நிலத்தடி குடியிருப்புகளில் வசிப்பதை லட்சக்கணக்கானவர்கள் விரும்பத் தொடங்கி உள்ளனர். பல்லாயிரம் பேர் இயற்கை பேரிடர் மற்றும் அணுசக்தி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளும் நிலத்தடி அறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வட அமெரிக்க பகுதிகள், மெக்சிகோ நகரம், சிங்கப்பூர், லண்டன் போன்ற இடங்களிலும் நிலத்தடி குடியிருப்புகள் நிறைய உள்ளன. நம் நாட்டிலும் பிரபலங்களின் பங்களாக்களில் ரகசிய அறைகள் நிலத்தடியில் இருக்கின்றன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

‘பழங்கால குகை மனிதர்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்துள்ளனர். அது மனித வாழ்க்கைக்கு ஏற்ற வசிப்பிடம்தான்’ என்கிறது பல்வேறு ஆராய்ச்சிகள். பலவிதங்களில் அது பாதுகாப்பானது என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர் என்கிறார்கள் பல்வேறு நாடுகளிலும் நிலத்தடி சுற்றுலா குடில்கள் மற்றும் குடியிருப்புகளை உருவாக்கித் தரும் நிபுணர்கள்.

“நிலத்தடி வாழ்க்கையில் சிரமம் என்றால் வெளிச்சக் குறைவு ஒன்றுதான். ஆனால் சூரிய வெளிச்சத்தை உள்ளே வரவழைக்கும் தொழில்நுட்பம், கதகதப்பு தரும் நவீன விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் அந்தக் குறையைப் போக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது உடலுக்கு அவசியமான, வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-டி உற்பத்திக்கு சூரிய ஒளிக்கதிர்கள் அவசிய மாகும். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைந்த சூரிய வெப்பமே நமது உடலிற்கு இந்த சக்திகளை வழங்கிவிடும். எனவே நிலத்தடியில் ஓய்வெடுப்பது ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை உணவு முறையின் மூலமும் போக்க முடியும். முட்டையின் மஞ்சள்கரு, மீன், பால், பாலாடைக்கட்டி ஆகியவற்றின் மூலமாக வைட்டமின்-டி குறைவை சரி செய்யலாம். எனவே விண்வெளி மற்றும் கடல் குடியேற்றங்களைவிட நிலத்தடி குடியேற்றங்களே மனிதனின் எதிர்கால வாழ்க்கைக்கானது” என்கிறது உலகளாவிய பருவமாற்ற பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சி குழு.

Next Story