செவ்வாய் கிரகத்தின் வெள்ளை மேகம்...


செவ்வாய் கிரகத்தின் வெள்ளை மேகம்...
x
தினத்தந்தி 7 Nov 2018 5:43 AM GMT (Updated: 7 Nov 2018 5:43 AM GMT)

திருமணத்தை மிக நெருக்கத்தில் வைத்துக் கொண்டு நிலை கொள்ளாமல் இருக்கும் பெண்ணின் நிலைதான் பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் அல்லது நிலவு போன்ற விண்வெளி அமைப்புகளில் போய் குடியேறி வாழவேண்டும் என்ற கனவுகள் மற்றும் கற்பனைகள் கொண்ட மனிதர்களின் நிலையும்.

ஏனென்றால், விரைவில் சென்று வாழப்போகும் இடம் எப்படி இருக்குமோ, அங்கு என்னென்ன சவுகரியங்கள் இருக்குமோ என்ற குழப்பங்கள் ஒருபுறமும், எந்த மாதிரியான சிக்கல்களை சந்தித்து சமாளிக்க வேண்டி வருமோ என்ற தீராத கவலை மறுபுறமும் ‘குறிப்பிட்ட அந்த நாள்’ வரும்வரை மணமக்களை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

ஆனால், செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் சென்று வாழ்வது என்பது கற்பனையாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஏனென்றால், தற்போதுள்ள ரோவர் (Rover) போன்ற, ஆய்வுக்கருவிகள் தாங்கிய, மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதி நவீன விண்வெளி போக்குவரத்து சாதனங்கள் பல, செவ்வாய் கிரகம் மற்றும் நிலவுகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அத்தகைய கருவிகளால் சேகரிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படும் பல்வேறு தகவல்களின் மீதான ஆய்வுகளின் அடிப்படையில், மனிதர்களை சிறு சிறு குழுக்களாக வேற்றுகிரகங்கள் அல்லது நிலவுகளில் குடியேற உள்ளனர். இதன்மூலம் அங்கு மனித வாழ்க்கை உண்மையிலேயே சாத்தியமா? மற்றும் தினசரி வாழ்க்கையில் மனிதன் அங்கு சமாளிக்க வேண்டிய ஆபத்துகள், சவால்கள் என்னென்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய முடியும். இதற்காக, இன்னும் சில வருடங்களில் செவ்வாய்க்கும், நிலவுக்கும் மனிதர்கள் நிச்சயமாக செல்ல இருக்கிறார்கள்.

இத்தகைய ஆய்வு முயற்சிகளின் பலனாக, செவ்வாய் கிரகம் குறித்த மிகவும் சுவாரசியமான சில தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், செவ்வாய் கிரகம் மீது, ஒரு நீண்ட வெள்ளை நிற மேகம் ஒன்று நீண்ட நாட்களாக நிலையாக இருப்பது தகுந்த அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 கி.மீ நீளம் கொண்ட இந்த வெள்ளை மேகமானது, செவ்வாய் கிரகத்தில் மத்திய ரேகையில் இருக்கக்கூடிய ஆர்சியா மன்ஸ் (Arsia Mons) எனும் எரிமலைக்கு மேலே குடிகொண்டு இருப்பதால், அது அந்த எரிமலை வெடித்துச் சிதறுவதால் ஏற்பட்ட மேகக்கூட்டமாக கூட இருக்கலாம் என்று பெரும்பாலான விண்வெளி ஆய்வாளர்களால் இதுவரை கருதப்பட்டு வந்துள்ளது.

ஆனால், இந்த வெள்ளை மேகம் இருப்பதை உறுதி செய்துள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கோடிக்கணக்கான ஆண்டுகளாக உறங்கிக்கொண்டு இருக்கும் ஆர்ஸியா மன்ஸ் எனும் எரிமலை திடீரென்று வெடித்துச் சிதறியிருக்க முற்றிலும் வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

மேலும், செவ்வாய்க்கு மேலே இருக்கும் இந்த வெள்ளை மேகமானது ‘ஓரோகிராபிக் மேகம்’ (orographic cloud) என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகளின் பக்கவாட்டில் இருக்கக்கூடிய இந்த வெள்ளை மேகங்கள் பனித்துளியாக மாறுகின்றன. மலைகளின் உச்சியை நோக்கி காற்று வீசும்போது அதன் மேல் பகுதியில் உள்ள மேகங்கள் விரிவடைந்து பின்னர் குளிர்வதால் சுற்றுச்சூழலில் உள்ள தூசுகள் மீது படர்ந்து பனித்துளிகளாக மாறுகின்றன என்று கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திலுள்ள ஆர்சியா மன்ஸ் எரிமலையின் மீது மேகங்கள் இருப்பது வருடத்தின் பெரும்பாலான நேரங்களில் காணக்கிடைக்கும் காட்சிகளில் ஒன்று. மேலும், குளிர்காலம் தொடங்கும் முன்பு அவை கலைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் பொருத்தமான தட்பவெப்ப சூழல் ஏற்படும்போது, குளிர்ந்த காற்று எரிமலையைச் சுற்றி வீசுவதனால் தண்ணீர் பனியால் ஆன மேகங்கள் தோன்றுவது வழக்கம். உதாரணமாக, கடந்த 2009, 2012 மற்றும் 2015 ஆகிய மூன்று வருடங்களிலும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ரோவரால் இந்த வெண் மேகம் படம் பிடிக்கப்பட்டது என்றும், அதன் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்தது என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், செவ்வாய் கிரகம் மிகப்பெரிய ஒரு தூசுப் புயலால் பெரிய பாதிப்புக்கு உள்ளானது. அந்தச் சமயத்தில்தான், அங்கு சில வருடங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஆப்பர்ச்சுனிட்டி (Opportu nity) ரோவர் முற்றிலும் செயலிழந்து போனது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, இந்த மேகத்தின் மீதான மேலதிக ஆய்வுகள் மூலமாக, செவ்வாய் கிரகத்தின் மீது தூசுகள் எப்படி உற்பத்தியாகின்றன மற்றும் எந்தெந்த வகைகளில் படிகின்றன என்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்படும்.

இதன் மூலமாக, எதிர்கால செவ்வாய் கிரக குடியேற்ற முயற்சிகளின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் என்னவென்று தெரியவரும் என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

தொகுப்பு: ஹரிநாராயணன்

Next Story