ஒளிமயமான வாழ்விற்கு உன்னத வழி


ஒளிமயமான வாழ்விற்கு உன்னத வழி
x
தினத்தந்தி 9 Nov 2018 6:33 AM GMT (Updated: 9 Nov 2018 6:33 AM GMT)

வெற்றி என்பது எளிதில் கிடைக்க கூடியது அல்ல, சாதனையாளர்களின் ஆரம்ப கால வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் மிகவும் கரடுமுரடான பாதையில் தான் பயணித்துள்ளார்கள்.

சாதனையாளர்கள் எப்போதுமே செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். சும்மா இருந்தால் துருப்பிடித்துப் போய்விடுவோம். என்னால் தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்ற மனநிலையை கையாள வேண்டும், காரணம் எல்லோரும் ஏதாவது ஒன்றில் தோல்வியடைந்தவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் அதற்காக முயற்சியே செய்யாமல் இருந்தால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவர்களால் தான் தொடர் வெற்றிகளை பெற முடியும்.

என்னால் சாதிக்க முடியாது, என்னால் எதுவும் முடியாது என்று தன்னை தானே மனதால் தாழ்த்திக் கொள்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களின் எண்ணம் இவ்வாறாக தான் உள்ளது. நம்மால் முடியுமா? என்று படிக்கட்டில் கால் வைக்கும் போதே நினைத்தால் நிச்சயம் சறுக்கும். வாழ்வில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே வெற்றி உங்களை வந்து சேரும்.

நான் படிப்பது எல்லாம் மறந்துவிடுகிறது, என்னால் இனி தேர்ச்சி பெற முடியாது, நான் எதற்காக படிக்க வேண்டும் என்ற தேவையில்லாமல் மனதை போட்டு வருத்தி தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாமல், என்னால் தேர்ச்சி பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் நினைவாற்றல் வளர்க்க பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்களால் தேர்ச்சி பெறமுடியும்.

நேர் மறையாக சிந்திக்கும் போக்கு குறைந்தும் எதிர்மறையாக சிந்திக்கும் போக்கு அதிகரிப்பதாலும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. எதிர்மறையாக சிந்திப்பவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தவறான முடிவுக்கு செல் கிறார்கள்.

உங்கள் மனதை தன்னம்பிக்கை நண்பர்கள் என்னும் தங்கத்தோடு சேர்த்தால் தான் மதிப்பு, அதை விடுத்து எதிர்மறை நண்பர்கள் என்னும் தகரத்தோடு பொருத்தி மனதை மதிப்பிழக்க செய்துவிடாதீர்கள். உலகில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அனைவருமே எதிர்மறையாளர்களை சந்தித்து விட்டுதான் வந்துள்ளார்கள். திரைப்படத்தைக் கண்டுபிடித்த எடிசனிடம் திரையில் வரும் ஒலியை யாரும் பணம் கொடுத்துப் பார்க்கமாட்டார்கள் என வலுவாக எதிர்த்தார்கள். மேரிகியூரியிடம் அவரது நண்பர் ரேடியத்தை பற்றி சிந்திப்பதை மறந்துவிடு என்று கூறினார். ஆனால் அத்தகைய எதிர்மறையாளர்களை வெற்றியாளர்கள் ஒரு பொருட்டாகவே நினைத்தது இல்லை.

எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை செயல்பாடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், அதிலிருந்து விடுபடவும் நேர்மறை சிந்தனையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். முடியாது என்ற வார்த்தை என் வாழ்விலேயே கிடையாது, அதை என் வாழ்வில் நான் பயன்படுத்தமாட்டேன் என்றார் மாவீரன் நெப்போலியன். அந்த உறுதியான நம்பிக்கை தான் அவரை வெற்றியாளராக மாற்றியது. துயரங்களைக் கண்டு நாம் ஓட ஓட அது நம்மை துரத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு முறை எதிர்த்து நின்றால் போதும், துயரம் நம்மை விட்டு விலகி ஓடும். எனக்கு வாழ்க்கையே ஒரு சந்தோஷ் மான நாடகம் என்னிடம் மனோதிடமும் உடல் வலுவும் நிறைய உண்டு. ஆகையால் எந்த காரியத்தையும் செய்து முடிக்கிற உறுதி என்னிடத்தில் உண்டு. இதை பிறரும் பழகிக்கொள்ளலாம் என்கிறார் அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு.

ஒரு மன்னனுக்கு முனிவர் ஒருவர் பெட்டி ஒன்றை தருகிறார். உங்களுக்கு எப்போது நெருக்கடி வருகிறதோ அப்போது அந்த பெட்டியை திறந்து பார்க்கும் படி முனிவர் கூறு கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வேற்று நாட்டு படைகளிடம் தோல்வி அடைந்த மன்னர் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்படுகிறார். அவர் தனிமையில் அமர்ந்தபடி தன் வாழ்க்கையின் வீழ்ச்சி குறித்து சிந்தித்து கொண்டிருந்த போது முனிவர் கொடுத்த பெட்டி நினைவுக்கு வரவே, அந்த பெட்டியை திறந்து பார்க்கிறார். நெருக்கடி வரும்போது திறந்து பார்க்கும்படி முனிவர் சொல்லி இருந்தாரே, இதற்குள் என்னதான் இருக்கிறது என்று ஆர்வத்துடன் திறந்து பார்த்த போது ஒரு வாசகம் நம்பிக்கையூட்டியது, “இதுவும் மாறும்“ என்ற வாசகத்தை திரும்பத் திரும்ப படித்து பார்த்தார். இப்போதைய நிலை மாறும் என்ற அர்த்தம் தெரிந்தது. இந்த நிலையை மாற்ற முடியுமா? என்று யோசித்தார். மாற்ற வேண்டும் என்ற மன உறுதி பெற்றார். மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தார். ரகசியமாக படைதிரட்டி, மீண்டும் தன் நாட்டை கைப்பற்றினார். ஒரு வாசகம் தரும் மாபெரும் நம்பிக்கை, மனஉறுதியை ஏற்படுத்தி மலையை கூட புரட்ட வைக்கலாம் என்பதை இந்த கதையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

வெற்றியாளர்கள் அத்தனைபேருமே தங்களுக்குள் உள்ள துணிவால் தான் எல்லா துயரங்களையும் விரட்டியிருக்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்று இன்னல்களை ஏற்றுக் கொள்ளும்போது தான் துயரங்களில் துவண்டு போகாமல் வாழமுடியும்.

விண்ணை நோக்கி செல்லும் ஏவுகணையை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று புலப்படும். தரையில் இருந்து மிகப்பெரிய சுமையுடன் விண்ணை நோக்கி செல்லும் ஏவுகணை தன்னுடைய ஒவ்வொரு சுமையாக மேலிருந்து கீழே விட்டுவிட்டு முடிவில் சுமை இல்லாத ஏவுகணை முன்பை விட வேகமாக விண்ணை கிழித்து கொண்டு செல்லும். அதுபோல தான் வாழ்வில் வெற்றி பெற்று எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், உங்களிடம் உள்ள தாழ்வுமனப்பான்மை என்னும் மிகப்பெரிய சுமையை கீழே இறக்கி வைக்கவேண்டும்.. இளைஞர்களே! இந்த வாழ்க்கை வெல்வதற்கு மட்டுமே தாழ்வுமனப்பான்மையால் தொலைந்து போவதற்கல்ல, தூக்கி எறியுங்கள் எதிர் மறை எண்ணங்களை, இரவுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வாருங்கள், சோதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள்! ஒளி மயமான வாழ்வு மலரும்.

- பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர்

Next Story