சீறிவரும் புயலும், காத்துக் கொள்ளும் முறையும்...!


சீறிவரும் புயலும், காத்துக் கொள்ளும் முறையும்...!
x
தினத்தந்தி 22 Nov 2018 5:42 AM GMT (Updated: 22 Nov 2018 5:42 AM GMT)

சமீபத்தில் ‘கஜா’ புயல் தமிழகத்தை கடந்தபோது நாகை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

புயல் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? என்ற வினாக்களுக்கு விடை காணலாம். ஒரு வெப்ப மண்டல புயல் என்பது வெப்ப மண்டல கடல் பகுதியில் தோன்றும் சுழலும் சலனங்கள். அதனுடைய நீளம் என்பது சரியாக 100 முதல் 1000 கி.மீட்டர் வரை இருக்கும்.

நம் பகுதியில் (வங்கக்கடல், அரபிக்கடல்) உருவாகும் புயல்கள் போன்று வடஅட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உருவாவதை ஹரிக்கேன் என்று அழைப்பார்கள். வடபசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாவதை டைபுன் என்று கூறுவர். தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தோன்றும் புயல் தென்கிழக்கு ஆப்பிரிக்க கடலோர பகுதிகளுக்கு செல்வதை காணலாம். தெற்கு பசிபிக் கடல் பகுதியில் தோன்றும் புயல் ஆஸ்திரேலியா மற்றும் பிஜி போன்ற தீவுகளில் பாதிப்பை உருவாக்குவதை காணலாம்.

இந்த புயல்கள் தோன்றுவதற்கு கடலின் வெப்பம் 26.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேலாக இருக்கவேண்டும். வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் காற்று முறிவு இருக்கக்கூடாது. அதாவது ஒரு உயரத்தில் கிழக்காகவும், இன்னொரு உயரத்தில் மேற்காகவும் காற்று வீசக்கூடாது. அப்படி இருந்தால் செங்குத்தான அமைப்பு சிதைந்து விடும்.

பொதுவாக புயலானது பூமத்திய ரேகையிலிருந்து 500 கி.மீ.க்கு அப்பால் உருவாகும். பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணத்தினால் ஏற்படும் பூமியின் சுழற்சி விசை (கொரியாலிஸ் விசை) யின் வலிமை பூமத்திய ரேகைக்கு அருகில்மிக குறைவாக இருக்கும். 500 கி.மீட்டருக்கு அப்பால் அதிகமாக இருப்பதால், அவை காற்றின் மிதப்பாற்றல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மேகங்கள் உருவாகும். தோன்றும் மேகங்களிலிருந்து நீராவி நீர்த்துளிகளாக மாறும்.அப்போது உள்ளுரை வெப்பம் வெளிப்படும். இந்த சக்தி காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும். இந்த வேகம் மணிக்கு 63 கி.மீ.க்கு மேல் இருந்தால் அந்த அமைப்பை புயல் என்று அழைக்கிறோம்.

இந்த காற்றின் வேகம் எவ்வாறு உள்ளது என்பது மட்டுமே அதன் அளவு கோல். இந்த காற்றின் வேகத்தை வைத்தே அதை புயலா, தாழ்வு மண்டலமா, தாழ்வு பகுதியா என்று குறிப்பிடுகிறோம். காற்று மட்டுமே அளவுகோல், அதன் பரப்பளவு அளவுகோல் அல்ல.

நமது பகுதியுடைய (வங்கக்கடல், அரபிக் கடல்) வரைபடத்தில் எல்லா வானிலை கூடங்களின் தரவுகள் பொறிக்கப்படும். அதாவது அந்த வானிலை கூடத்தில் பதிவு செய்யப்பட்ட காற்றின் அழுத்தம், வெப்பம், காற்றின் திசை மற்றும் வேகம் மற்றும் பல வானிலை தரவுகள் பொறிக்கப்படும். பிறகு காற்றின் அழுத்தத்தை பகுப்பாய்வு செய்வார்கள். இந்த சம அழுத்த கோடுகள் 2 ஹெக்டோ பாஸ்சல் வித்தியாசத்தில் வரையப்படும்.

இந்த சம அழுத்த கோடுகளில் ஒரு வட்டமாக வரைய முடியுமென்றால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டு என்றால் தாழ்வு மண்டலம். மூன்றுக்கும் மேல் என்றால் புயல். வட்டமாக வரைய முடியாமல் விளிம்பு போன்று இருந்தால் காற்றழுத்த தாழ்வு நிலை. ஆளில்லா பரந்த பெருங்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தரவுகள் கப்பல்கள் மற்றும் மிதக்கும் தானியங்கி வானிலை கூடத்தின் மூலம் பெறப்படுகிறது. செயற்கை கோள் மூலம் மேகத்தொகுதிகளின் அமைப்பை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு புயலின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கும் பொழுது, நான்கு நிலைகள் உள்ளன என்பது தெரியவரும். கடல் பகுதியில் மேகத்தொகுதிகளின் அமைப்பு ஒன்றோடு ஒன்று இணைவதை காணலாம். அங்கே காற்று குவிதல் நடைபெறுவதை அறியலாம். இதுவே ஆரம்ப நிலை ஆகும்..

காற்று குவிதல் நடைபெறும் பொழுது, பூமியின் சுழற்சியை பயன்படுத்தி மிதப்பாற்றல் பெற்று வளிப்பகுதி மேலே செல்லும் பொழுது கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் குறையும்.

இந்த பகுதியில் தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறுவது என்பது முதிரா நிலை. ஒரு நிலைக்கு மேலே அந்த மையப்பகுதியில் காற்றழுத்தம் குறைவது என்பது அதிகமாக இருக்காது. ஆனால் புயலின் பரப்பளவு அதிகமாகும். இது முதிர் நிலை. அதே புயலின் மையப்பகுதி நிலைப்பகுதியை தொடும் பொழுது கரையை கடந்தது என்போம். அப்பொழுது புயல் வலுவிழக்க தொடங்கும். இதற்கு காரணம், தரை பகுதியில் உள்ள உராய்வு மற்றும் நீராவி போக்கு புயலின் உள் செல்வது குறையும். சில நேரங்களில் புயல் சில பகுதிகளில் செல்லும் பொழுது மேல் அடுக்குகளில் வீசும் வேகமான காற்று அதன் செங்குத்தான அமைப்பை சிதைத்து விடும். புயலானது குளிர்ந்த வெப்பமுடைய பகுதியை அடைந்தாலும் நலிவு நிலையை எட்டும்.

மிகுந்த வலிமையுடைய புயல்களில் மேகமற்ற கண் பகுதி இருக்கும். இது சுமார் 20 முதல் 50 கி.மீ. விட்டம் கொண்டதாக இருக்கும். கண் பகுதியில் மேகமற்ற காற்றில்லாத சூழ்நிலை இருக்கும். இந்த கண் பகுதியை ஒட்டிய பகுதி சுவர் முகில் பகுதி. இந்த பகுதியில்தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த பகுதியில்தான் மிக அதிகமாக மழை பெய்யக்கூடிய பகுதி. வெளிப்பகுதியில் உள்ள மேக தொகுதிகளில் மழை இருந்தாலும் சுவர் முகில் பகுதியை காட்டிலும் குறைவுதான். வட அரை கோளத்தில் காற்றின் சுழற்சி இட வலஞ்சுழியாக இருக்கும். தெற்கு அரை கோளத்தில் காற்றின் போக்கு கெடிகார முள் நகர்வதுபோல் இருக்கும்.நமது பகுதிகளில் (வங்க மற்றும் அரபிக்கடல்) புயல் அதிகமாக தோன்றுவது ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களாகும். ஜூன் முதல் செப்டம்பர் வரை புயல்கள் வருவது என்பது அரிதானதுபுயல் கரையை கடக்கும் பகுதியின் வடபகுதியில் மையத்திற்கு அண்மையில் வீசும் பெரும் காற்று காரணமாக பொங்கு அலைகளை காணலாம். சீற்றமிகு அலைகள் பின்வாங்கும் பொழுது பெரும் சேதத்தை விளைவிக்கும். பின்வாங்கும் கடல் நீர் தன் வழியிலுள்ள அனைத்தையும் சேதபடுத்தி இழுத்து சென்றுவிடும் திறன் மிக்கவை.

பெரும் வேகத்துடன் வீசும் கடும் காற்று காரணமாக கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் சேதமும், பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும்.இடைவிடாத தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புண்டு. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைய வாய்ப்புண்டு.

இந்த சீற்றங்கள் காரணமாக பெரும்பாலும் குடிசை வீடுகள், பயிர்கள் மற்றும் மரங்கள் பாதிப்படைகின்றன. கடும் நிகழ்வுகள் காரணமாக மின் மற்றும் தொலை தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.புயல் உண்டாவதற்கான சாத்திய கூறு அலகு என்ற கணினி சார்ந்த கணிப்பின் மூலம் 7 அல்லது 8 நாட்களுக்கு முன்பே புயல் உருவாவதை அறியலாம். அது உருவான பிறகு செயற்கை கோள் படத்தின் மூலம், அதன் நகர்வை அறிய முடியும். வரும் நாட்களில் அது எந்த அளவு வலுப்பெரும் மற்றும் எந்த பாதையில் நகரும் என்பதை கணினி சார் கணிப்பின் மூலம் அறிய முடியும். பல நாட்டு கணினிகளின் கணிப்பு வரும் பொழுது அதில் மாறுபாடு இருக்கும். அந்த கணிப்புகளை சேகரித்து மீண்டும் ஒரு கணினியில் புகுத்தி கருத்தொற்றுமையை அறிந்து, எந்த திசையில் அந்த புயல் செல்லும் என்பதை கணிக்க இயலும். கஜா புயல் முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து, பிறகு தென்மேற்காக தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்பது இவ்வாறே கணிக்கப்பட்டது.

கடல் கரைக்கு 300 கி.மீ. அண்மையில் வரும்பொழுது ரேடார் கருவி மூலம் கணிக்கப்படுகிறது. ரேடாரில் அதன் கண் பகுதி தெளிவாக தெரியும் பொழுது மணிக்கொரு முறை இணைய தளத்தில் செய்திகள் வெளியிடப்படும்.

வானிலை கூடத்திலிருந்து காற்றின் அழுத்தம் மணிக்கொரு முறை பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்கான மாறுபாடு கணிக்கப்படும். எங்கு அதிகமாக அழுத்தம் குறைந்துள்ளதோ, அதுவே புயல் சென்று அடையும் இடம் என்று நாம் தெரிந்து கொள்ள முடியும்.

தாழ்வான இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்வது மிக அவசியம். அருகிலுள்ள ஆறுகள் மற்றும் நீரோடை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சிறிய ரக டிரான்சிஸ்டர், டார்ச் விளக்கு, முதலுதவி பெட்டி, உலர வைத்த உணவு, பருகி நீர், மருந்து பொருட்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொள்வது நல்லது. நெகிழி(பிளாஸ்டிக்) கயிறுகள் வைத்து கொள்வது நல்லது. நெகிழி பைகளில் உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். காற்று வேகமாக இருக்கும் பொழுது ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டும். தொங்கும் மரக்கிளைகள் மற்றும் தொங்கும் மின்சார ஒயர்களை தவிர்த்து விடுவது நல்லது. சமையல் எரிவாயு கசிகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். சுவர்கள் ஈரமாக இருக்கும் பொழுது மின் உபகரணங்களை உபயோகிக்க வேண்டாம்.

- எஸ்.ஆர்.ரமணன், வானிலை மைய முன்னாள் இயக்குனர்

Next Story