உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 25 Nov 2018 11:19 AM GMT (Updated: 25 Nov 2018 11:19 AM GMT)

அவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பிளஸ்-டூ வரை படித்துவிட்டு, துணிக் கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் காதல் வசப்பட்டாள்.

 காதலன், அதே கடையில் பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன், அவளைவிட மூன்று வயது சிறியவன். ஓரளவு வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவன். இருவரும் வெவ்வேறு சமூகப் பிரிவுகளை சேர்ந்தவர்கள். அதனால் இருதரப்பில் இருந்தும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு காதலுக்கு துணைபோவதாகக்கூறி ஒரு தரப்பினர், அந்த கடை உரிமையாளரையும் தாக்கினார்கள். அதனால் அவர்கள் காதல், ஒரு கலவரத்தையே உருவாக்கும் சூழ்நிலை உருவானது.

அந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க நினைத்த காதலர்கள், இரவோடு இரவாக பக்கத்து மாநிலத்திற்கு சென்றுவிட்டார்கள். அங்கே கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையை தொடங்கினார்கள். பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அவள் குழந்தையை கவனித்துக்கொண்டு வீட்டிலே இருந்தாள். அவன் சரக்கு வாகனம் ஒன்றை, அந்த பகுதியில் வாடகைக்கு ஓட்டிவந்தான். குழந்தை வளர்ந்து பள்ளிக்கு சென்றாள். அது வேற்றுமொழி கொண்ட மாநிலம் என்பதால் அந்த பெண்ணால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை.

அவர்கள் வாழ்க்கை சுமூகமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்த திடீர் விபத்து நடந்தது. வாகனத்தை ஓட்டிச்சென்ற அவன் விபத்தில் சிக்கி இறந்துவிட்டான். அவள் விதவையானாள். அப்போது அந்த சிறுமி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.

கணவனின் மரணம் தன்னை தனிமைப்படுத்திவிட்டதால் அழுது அரற்றிக்கொண்டிருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது. அவன் இறந்துவிட்டதை எப்படியோ தெரிந்துகொண்டு, அவனது தந்தை சிலருடன் வந்தார். வந்தவர், ‘உன்னைவிட சின்ன பையனான என் மகனை கடத்திக்கொண்டு வந்து குடும்பம் நடத்தி, குழந்தையும் பெற்றுவிட்டு அவனை கொன்றுவிட்டாயே பாவி..! வேறு மாநிலம் என்பதால் உன்னை உயிரோடு விட்டுவைக்கிறோம். சொந்த ஊருக்கு வந்துவிடாதே.. கொலை செய்துவிடுவோம்..’ என்று மிரட்டிவிட்டு சென்றார்கள். (அவர் அப்படி மிரட்டியதற்கு காரணம், சொத்து. அவள் குழந்தையோடு வந்து சட்டப்படி சொத்தில் பங்கு கேட்டுவிடுவாள் என்ற பயத்தில் அவ்வாறு நடந்துகொண்டார்)

அவள் உயிருக்கு பயந்து, அந்த மாநிலத்திலே வசித்துவிடலாம் என்று முடிவுசெய்தாள். மகளை அங்குள்ள அரசாங்க பள்ளியில் சேர்த்துவிட்டு, அருகில் உள்ள சந்தைக்கு எடுபிடி வேலைக்கு சென்றாள். ஆனால் அவளால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. இளம் வயதில் தனிமையில் வாழ்ந்த அவளுக்கு பல வழிகளில் தொந்தரவு ஏற்பட்டது. இரவில் யார் யாரோ வந்து கதவைத்தட்டினார்கள். பல நாட்கள் பயத்தில் மகளுடன் விடிய விடிய விழித்திருந்தாள்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவளது தாய்மொழியை பேசும் சந்தை வியாபாரி ஒருவர் அறிமுகமானார். அவர் நடுத்தர வயதுக்காரர். அவளோடு அறிமுகமான சில மாதங்களிலே, ‘எனது மனைவி இறந்துவிட்டதால் நான் இங்கே தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். உன் கஷ்டம் எல்லாம் எனக்கு புரிகிறது. நான் உன்னை மறுமணம் செய்துகொண்டு, உன் குழந்தைக்கும் நல்ல தந்தையாக இருப்பேன். நீ வேலைக்கு செல்லவேண்டியதில்லை. நானே குடும்பத்தை கவனித்துக்கொள்கிறேன்’ என்றும் சொன்னார்.

பாதுகாப்பு கருதி அவளும் அதை ஏற்றுக்கொண்டாள். மீண்டும் ஒரு கோவிலில் மறுமணம் நடந்தது. ஆறு மாதங்கள் கடந்ததும் அவள் மீண்டும் தாய்மையடைந்தாள். அவர்கள் ஆவலோடு புதிய குழந்தைக்கு காத்திருந்த நேரத்தில், நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி, 17,18 வயது கொண்ட இரண்டு மகன்களுடன் வந்து இறங்கினாள். வந்த வேகத்திலே அவளை கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து உதைத்தாள். ஆவேசம் தணிந்து அவள் பேச தொடங்கிய பின்புதான், அவள் அந்த நடுத்தர வயது வியா பாரியின் மனைவி என்றும், இரண்டு இளைஞர்களும் அவரது மகன்கள் என்பதும் தெரிந்தது. அந்த வேகத்திலே தனது கணவனின் சட்டையை பிடித்து உலுக்கி, ‘நீ இங்கே செய்த வியாபாரமெல்லாம் போதும்.. வா ஊருக்கு..’ என்று இழுத்துச்சென்று விட்டாள்.

போலீசுக்கு யாரோ தகவல் சொன்னார்கள். போலீஸ் வருவதற்குள் அவன் குடும்பத்தோடு கிளம்பிப் போய்விட்டான். கையில் சிறுமியோடும், வயிற்றில் குழந்தையோடும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள்.

- உஷாரு வரும்.

Next Story