சிறப்புக் கட்டுரைகள்

வீட்டுக்கு அழகு சேர்க்கும் தரை விரிப்பு + "||" + Add beauty to home Carpet

வீட்டுக்கு அழகு சேர்க்கும் தரை விரிப்பு

வீட்டுக்கு அழகு சேர்க்கும் தரை விரிப்பு
வீட்டிற்கு அழகு சேர்க்க ஆசைப்பட்டால் வண்ணமயமான தரை விரிப்பு (கார்பெட்) நிச்சயம் அதை செய்யும். ஆனால் தரைவிரிப்பு வேண்டும் என நினைத்ததும் கடைக்கு சென்று விடாதீர்கள்.
பொதுவாக வியாபாரிகள் பல்வேறு தரைவிரிப்பு மாதிரிகளை தங்கள் கடைகளில் வைத்திருப்பார்கள். அத்தனையையும் பார்த்தால் நமக்கு தலையும் புரியாது, காலும் புரியாது.

எனவே கார்பெட் வாங்க செல்லும் முன்பு, முதலில் என்ன மாதிரியான தரைவிரிப்பு நமக்கு தேவை என்பதை கண்டுபிடியுங்கள். அப்போதுதான் அழகு, சவுகரியம், நீடித்த உபயோகம் என அனைத்தும் கூடிய தரமான தரைவிரிப்பை நீங்கள் பெற முடியும்.

அதற்கு முன் சிலவற்றை தெரிந்திருக்க வேண்டும். எத்தகைய தரம், வடிவம், வகையை சேர்ந்த கார்பெட் வீட்டிற்கு உகந்தது என்பதை வியாபாரியிடம் சொல்ல வேண்டும். கார்பெட் விரிக்கப்படும் அறையில் எத்தனை பேர் புழங்குவார்கள்? என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

அதிகமானவர்கள் பயன்படுத்தும் அறைகளுக்கு வெளிர் நிறம் உகந்ததல்ல. தரைவிரிப்பு விரிக்கப்பட்ட இடத்தில் குழந்தைகள் விளையாடுவார்களா? அல்லது அலுவல் பயன்பாட்டிற்கான அறையா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிர் நிறம் என்றால் பராமரிப்பு கடினமாகிவிடும். மற்றொரு முக்கிய காரணம் குழந்தைகள் விளையாடுகையில் தரைவிரிப்பில் தடுக்கி விழுந்துவிடக் கூடாது.

கார்பெட்டின் நிறத்தை பொறுத்து ஒரு அறை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காட்சியளிக்கும். அடர் நிறமாக இருந்தால் பிரமாண்டமான அறைகூடக் கொஞ்சம் குறுகலாக தோன்றும். அதே வெளிர் நிறங்களை பயன்படுத்தும்போது அறை அகலமாக தோன்றும். அறையினுள் சூரிய ஒளி பிரகாசிக்குமானால் அங்கு விரிக்கப்பட்டிருக்கும் தரைவிரிப்பின் இயல்பான நிறம் அப்படியே வெளிப்படும்.

தரைவிரிப்பு வாங்கும் போது, உங்கள் வீட்டு சுவரின் வண்ணம், மரச்சாமான்கள், வீட்டு அழகுச்சாதன பொருட்களின் நிறங்களை யோசித்துக் கொள்வது நல்லது. உங்கள் வீட்டின் மற்ற நிறங்களோடு ஒத்துப்போகும் நிறத்தில் உள்ள கார்பெட் தான் அழகு சேர்க்கும். நீங்கள் பயன்படுத்தும் நிறங்கள் உங்கள் மனநிலையோடு நேரடி தொடர்புடையவை.

சிவப்பு, பச்சை போன்ற பளர் நிறங்கள் உங்களை சுறுசுறுப்படைய செய்யும். நீலம், வெள்ளை போன்ற நிறங்கள் மனதை சாந்தப்படுத்தும். கார்பெட் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் ஒளி அமைப்பும், கார்பெட் விற்கும் கடையின் ஒளி அமைப்பும் ஒன்றல்ல. எனவே தெளிவான வெளிச்சத்தில் சரியான தரை விரிப்பை பார்த்து வாங்குங்கள்.